கேடியில் பிகேஆர் இளைஞர் பிரிவினர் கைது 5 Jan | செய்தி.

கோலாதிரெங்கானு போலீசார், கெஅடிலான் ரக்யாட் (பிகேஆர்) இளைஞர் பிரிவு உறுப்பினர் ஐவரை இன்றுகாலை கைது செய்தனர். அவர்களில் திரெங்கானு இளைஞர் பிரிவுத் தலைவர் பாரிஸ் மூசாவும் ஒருவராவார்.

எதிர்வரும் இடைத்தேர்தலையொட்டிய கெஅடிலானின் பரப்புரையின் ஒரு பகுதியாக, கொலையுண்ட மங்கோலிய பெண் அல்தான்துயாவின் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டியதற்காக அவ்வைவரும் கைது செய்யப்பட்டனர் என அப்பிரிவின் தேசியத் தலைவர் ஷியாம்சுல் இஸ்கண்டர் கூறினார்.

தேசிய நிந்தனைச் சட்டம் , பிரசுர மற்றும் பதிப்பக சட்டத்தின்கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

விசாரணைக்காக  கோலாதிரெங்கானு போலீஸ் தலைமையகம் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் இன்றே விடுவிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்கைது நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறிய ஷியாம்சுல், அது பிகேஆர் உறுப்பினர்களை மிரட்டும் போலீசாரின் திட்டமிட்ட போக்கைக் காண்பிக்கிறது என்றார்.

“சுவரொட்டிகள் ஓட்டுவதைக் குற்றச்செயலாகக் கருத முடியாது. துணைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று  (கோலாதிரெங்கானு)போகிறார். அதனால்தான் போலீசார் அவர்களைக் கைது செய்ததாக நான் கருதுகிறேன்”, என்று அவர் குறிப்பிட்டார்.

“இது நஜிப் அச்சம் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அத்துடன் அல்தான்துயா கொலையில் அவருக்கு சம்பந்தமுண்டு என்ற நினைப்பையும் வலுப்படுத்துகிறது”, என்றாரவர்.

அதில் தமக்குச் சம்பந்தமிருப்பதாகக் கூறப்படுவதைத் மறுக்கும் துணைப் பிரதமர், அந்த மங்கொலியப் பெண்ணைத் தெரியாது என்றும் அவரைச் சந்தித்தது இல்லை என்றும் கூறியுள்ளார்.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply