தமிழ்ப் பள்ளிகளை மறக்காதீர், சந்தியாகு 16 Apr | செய்தி.

santiago.jpgதாய்மொழிக் கல்வி விவகாரங்கள் தொடர்பாக அரசாங்கம் ஆலோசனை கலக்கும்போது அது சீனப் பள்ளிகளை மட்டும் உள்ளடக்கியதாக இருத்தல் கூடாது. இதனை வலியுறுத்தும் கிள்ளான் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு அது எல்லா மொழிகளையும்  உள்ளடக்க வேண்டும் என்றார்.

சீனக் கல்வி விவகாரங்கள் பற்றி விவாதிக்க  சீனக் கல்வி அமைப்பான டொங் ஜியாவ் ஜோங் (DJZ)-உடன் சேர்ந்து ஓர் ஒருங்கிணைப்பு பிரிவை அமைக்கும் கல்வி துணை அமைச்சர் டாக்டர் வீ கா சியோங்கின் முயற்சியை வரவேற்ற சந்தியாகு அதன் தொடர்பில் இன்னும் நிறைய செய்ய முடியும் என்றார்.

“அதில் தாய்மொழிக் கல்வியுடன் தொடர்பு கொண்ட தமிழ் அறவாரியம் போன்ற அரசாங்க சார்பற்ற அமைப்புகளையும் சமுக பிரதிநிகளையும்கூட சேர்த்துக் கொள்ளலாம்”, என்றார் சார்ல்ஸ் சந்தியாகு.

“கல்விக் கொள்கையால் ஓரங்கட்டப்பட்ட எல்லா சமுகங்களின் கருத்துகளையும் கேட்டறிவது துணை அமைச்சரின்

பொறுப்பாகும்”, என்று சந்தியாகு இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

வெறுமனே கலந்தாலோசனை என்ற அளவில் நின்றுவிடாமல் கலந்தாலோசனைக்கான ஏற்பாடு சட்டபூர்வமாக்கப்படுவதும் அவசியமாகும். இது பின்னர் பிரச்னகள் தோன்றாமலிருப்பதைத் தவிர்க்க உதவும் என்றாரவர்.

“மொழிவாரி பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் தன்மூப்பாக   செயல்படாமல் அவற்றை விவாதிக்கவும் அவை தொடர்பாக ஆலோசனைகள் பெறவும் கல்வி அமைச்சு முன்வந்திருப்பது ஒரு நல்ல அணுகுமுறையாகும்”, என்று அவர் மேலும் கூறினார்.

அந்த ஒருங்கிணைப்புப் பிரிவு நிர்வாக விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் போதுமான பள்ளிக் கட்டடங்களைக் கட்டுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

“போதுமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுவதை உறுதி செய்வதுடன் முழுமையாக-உதவி பெறுபவை, பகுதி-உதவி பெறுபவை என்ற பாகுபாட்டையும் அகற்ற வேண்டும்”.

கணிதம் அறிவியல் பாடங்களைக் கற்பிப்பதில்  போதனாமொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்படும் கொள்கையை மறு ஆய்வு செய்வதையும் அப்பிரிவு பரிசீலிக்க வேண்டும் என்பதுடன் டாமன்சாரா சீன தொடக்கநிலைப் பள்ளியை மீண்டும் தொடங்குவதற்கும் அது ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் 98 சீன தொடக்கப் பள்ளிகள் தேவைப்படுவதாக DJZ அறிவித்திருப்பதையும் அப்பிரிவு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாணவர் எண்ணிக்கை உயர்ந்து வருவதற்கு ஏற்ப கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் ஏழு சீனப் பள்ளிகளும் குறைந்தது இரண்டு தமிழ்ப்பள்ளிகளும் புதிதாக கட்டப்பட வேண்டும் என அவர் கூறினார்.

“கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கிள்ளான் பிரதிநிதியாக ஒருங்கிணைப்புக் குழுவில் இணைந்துகொள்ள நானும் தயாராக இருக்கிறேன்”, என்று சந்தியாகு தெரிவித்தார்.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply