எஃப்டிஐ குறித்து முஸ்தபா உண்மை சொல்லவில்லை, ரசாலி 1 Aug | செய்தி.

கடந்த ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) 81 விழுக்காடு வீழ்ச்சி கண்டதற்கான உண்மைக் காரணத்தை அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்டபா முகம்மட் கூறவில்லை என்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் தெங்கு ரசாலி ஹம்சா.

“அவர் உண்மை பேசவில்லை. ஏதேதோ சொல்லி சமாளிக்கப் பார்க்கிறார்.” இன்று  2010 மலேசிய மாணவர் தலைவர்கள் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்ட ரசாலி ஹம்சா இடையில் மலேசியாகினியிடமும் பேசினார்.

அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது மலேசியாவுக்கு வந்த எஃப்டிஐ குறைந்துபோனதற்கு அமைச்சர் கொடுத்த விளக்கம் குறித்து ரசாலி கருத்துரைத்தார்.

வட்டார நாடுகளுக்குச் செல்லும் தரம்தாழ்ந்த முதலீடுகளைக் கவர மலேசியா நாட்டம் கொண்டிருக்கவில்லை  என்று முஸ்டபா கூறியிருந்தார்.

மலேசியாவில் முதலீடு நிரம்பிக்கிடப்பதால்தான் உள்நாட்டு முதலீட்டாளர்கள் வெளிநாடு செல்கிறார்கள் என்று அமைச்சர் கூறிய  காரணமும் ஏற்கத்தக்கதல்ல என்று அந்த குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

“உண்மையான பிரச்னை (முதலீட்டாளர்) நம்பிக்கை. (அவர் கூறும் காரணங்கள் உண்மையானால்) ஒய்டிஎல் போன்ற நிறுவனங்கள் சிங்கப்பூரில் மின் ஆலைகளை அமைப்பது ஏன்?

“நாட்டை மேம்படுத்த… பயிற்சிகளுக்கு, திறன் வளர்ச்சிக்குப் பணம் தேவை”, என்றாரவர்.

முன்னதாக மாணவர் உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய அம்மூத்த அரசியல்வாதி, மலேசியா சிறப்பாக இருப்பதற்கு நல்ல நிர்வாகம் காரணம் அல்ல, அளவற்ற இயற்கை, பண்பாட்டு, சமூக வளம் நிறைந்திருப்பதுதான் காரணம் என்றார்.

“ஆனால், இதைத் தவறான நிர்வாகத்தாலும் ஊழல் செயல்களாலும் அழித்து வருகிறோம்.”

உள்நாட்டு வெளிநாட்டு மாணவர்கள் சுமார் 600 பேர் திரண்டிருந்த கூட்டத்தில் ரசாலி பேசினார்.

“இப்போதுள்ள அரசியல் வர்க்கத்துக்கு இன்றைய மையப் பிரச்னைக்குத் தீர்வுகாண விருப்பம் இல்லை அல்லது தெரியவில்லை.. ஏனென்றால் பொய்களையும் திருட்டுத்தனங்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு அவர்களுக்கும் செளகரியமாக இருக்கிறது.”

இளைஞர்கள் மூத்தவர்களின் தவறான விருப்பங்களுக்குத் துணைபோகக்கூடாது என்றும் அவர்களின் பாதையை அவர்களே வகுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ரசாலி வலியுறுத்தினார்.

“பிரதமர் வழிமொழியும் எதிர்காலம் மீது  நம்பிக்கை வைக்காதீர்கள். உங்கள் எதிர்காலம் வரும்போது அவர் பணி ஓய்வுபெற்றிருப்பார். நானும் மறைந்திருப்பேன்.”

“ஒன்றைச் செய்யும்போது மற்றவரைப் ‘பின்பற்றி’ என்று செல்வதை விடுக….மற்றவர்களின் சலுகையை எதிர்பார்த்து எதுவும் செய்யக்கூடாது. உங்கள் திட்டப்படியே செயல்படுங்கள். இங்கு நீங்கள் பேச அழைத்திருக்கும் அரசியல்வாதிகள் உங்களைச் சிறுமைப்படுத்திப் பேச இடம்கொடுக்காதீர்கள்.”

அந்த இரண்டு-நாள் மாநாட்டில் பேச துணைப் பிரதமர் முகைதின் யாசின், உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் முதலியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

“இனத்தின் அடிப்படையில் அமைந்த பொருளாதார, கல்விக் கொள்கைகளை”க் கைவிட வேண்டுமெனக் கோருவதில் தவறில்லை என்பதையும் தெங்கு ரசாலி, அந்த இளைஞர்களுக்கு நினைவுறுத்தினார்.

அதே வேகத்தில், இன அடிப்படையில் அமைந்த அரசியலுக்கு முடிவுகட்ட பிஎன்னிலும் பக்காத்தான் ரக்யாட்டிலும் நேரடி உறுப்பியம் பெற வகைசெய்யப்பட்டு  பலஇனங்களைக் கொண்ட இரட்டைக்கட்சி அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply