தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில் பெற்றோர்களும் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களும் மிகுந்த ஈடுபாடு காட்ட வேண்டும். பெற்றோர்-ஆசிரியர் சங்கம் ஓர் இயக்கமாக மாற வேண்டும்; ஒருவர் தன் வீட்டின் மீது காட்டும் ஈடுபாட்டை தமிழ்ப்பள்ளியின் மீதும் கொண்டிருக்க வேண்டும்.
இக்கருத்துகள் “பெற்றோர்களின் எழுச்சி தமிழ்ப்பள்ளிகளின் மறுமலர்ச்சி” என்ற தலைப்பில் கோலாலம்பூர் சீன அசம்பிளி மண்டபத்தில் சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஒரு கலந்துரையாடலில் கூறப்பட்டது.
தமிழ் அறவாரியம் ஜூலை 10 ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த இந்தக் கலந்துரையாடலில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் 65 பள்ளிகளைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட அப்பள்ளிகளின் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதிகாரத்துடன் கேளுங்கள்
இக்கலந்துரையாடலில் சீனமொழி கல்வி ஆதரவு மன்றங்களின் பிரதிநிதிகள் எழுவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், காஜங் நியு எரா கல்லூரியின் முன்னாள் தலைவரும் தற்போது சுவாராம் என்ற மனித உரிமை கழகத்தின் இயக்குனருமான டாக்டர் குவா கியா சூங் தலைமையில் கலந்து கொண்டது ஒரு சிறப்பு அம்சமாகும்.
சீனமொழி கல்வி போராட்டத்தில் தீவிர பங்காற்றியதற்காக இசா சட்டத்தின் கீழ் எட்டரை ஆண்டுகள் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டிருந்த கோ இக்கலந்துரையாடலில் உரையாற்றியபோது “உங்களுடையப் பள்ளிக்காக அதிகாரத்தோடு கேளுங்கள்; சீன சமூகம் உங்களின் கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கிறது” (“Demand for your school; Chinese community endorses your demands.”) என்று அங்கு குழுமியிருந்தவர்களின் பலத்த கைத்தட்டலுக்கிடையே கூறினார்.
பெற்றோர்களின் எழுச்சி தமிழ்ப்பள்ளிகளின் மறுமலர்ச்சி கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றிருந்த ஓம்ஸ் தியாகராஜன் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் “நமது மக்கள் எவ்வாறு ஒற்றுமையாகச் செயல்படப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது”, என்று கூறினார்.
மேலும், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில் ஈடுபாடுள்ள அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும்
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் ஒரு பக்கம்; தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் இன்னொரு பக்கம்; இவர்களுக்கிடையில் அகப்பட்டுக்கொண்டு பாதிக்கப்படுபவர்கள் மாணவர்கள். “இந்நிலை மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும்”, என்று வலியுறுத்தினார் சி.பசுபதி.
இச்சூழ்நிலையில் தமிழ்ப்பள்ளிகள் சுழன்றுகொண்டிருப்பதற்கு 1) பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கத்திற்கும் பள்ளி நிருவாகத்திற்கும் இடையிலான இடைவெளி, 2) பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் பங்களிப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு அங்கீகாரம் இல்லாமை, 3) மாணவர்களுக்கு உதவுவதற்கு பெற்றோர்களுக்கு வேண்டிய தேவைகள் மீது கவனம் செலுத்த தவறியது ஆகியவை முக்கிய காரணங்களாகும் என்று பசுபதி கூறினார்.
இந்நிலை மாற்றப்படுவதற்கு, பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் அவற்றின் நோக்கங்களை விரிவுபடுத்த வேண்டும். குழந்தைகளின் கல்வியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதற்கும் அதற்கான குறிப்பிட்ட வியூகங்களை வரைவதற்கும் அவை தயாராக வேண்டும் என்றாரவர்.
பள்ளிகளின் நோக்கத்தோடு பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதோடு அவற்றின் திறனையும் வளத்தையும் மாணவர்களின் மேம்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டும் என்பதை பசுபதி வலியுறுத்தினார்.
பள்ளிகளின் நோக்கங்கள் மாணவர்களின் கல்வி கற்கும் தரம் உயர்த்தப்படல், கற்பதற்கு பாதுகாப்பான மற்றும் கட்டுப்பாடான சூழ்நிலையை அளித்தல் மற்றும் படிப்பை முடிக்காமல் போகும் மாணவர்களின் விகிதாசாரத்தைக் குறைத்தல் ஆகியவையாக இருக்க வேண்டும்.
இப்போது இருப்பதுபோல் அல்லாமல், பெற்றோர் – ஆசிரியர் சங்கம் மாணவர்களின் வளர்ச்சியில் ஈடுபாடுள்ள மையமாக மாற வேண்டும். சங்கமும் பள்ளியும் இணைந்துச் செயல்பட வேண்டும். இது சாத்தியமே என்று பசுபதி கூறினார்.
பெற்றோர்-ஆசிரியர் சங்கத்திற்கு அதிகாரம்
இந்நாட்டில் தாய்மொழி பள்ளிகளின் வரலாற்றை திரும்பிப் பார்த்த டாக்டர் குவா, நாட்டின் சுதந்திர தினத்திற்கு முன்னதாக 1,350 சீனமொழி பள்ளிகளும் 888 தமிழ்மொழி பள்ளிகளும் இருந்ததைச் சுட்டிக்காட்டி கடந்த 53 ஆண்டு காலத்தில் சீன மற்றும் இந்திய மக்களின் எண்ணிக்கை கூடியிருக்கையில் பள்ளிகளின் எண்ணிக்கை முறையே 1,250 மற்றும் 523 ஆக குறைந்து இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
தாய்மொழி பள்ளிகளின் எண்ணிக்கை குறைவடைந்ததற்கு ஆட்சியில் இருப்பவர்கள் பல காரணங்களைக் கூறலாம். ஆனால், “அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை நாம் கூற வேண்டும், கூறுவதற்கு நாம் தயங்கக்கூடாது”, என்பதை குவா வலியுறுத்தினார்.
இண்ட்ராப் அலை
“தாய்மொழி பள்ளிகள் எதிர்கொள்ள வேண்டியுள்ள மறைமுக தாக்குதல்கள் மற்றும் அவை இன்னும் அபாய கட்டத்திலிருந்து வெளியேறி பாதுகாப்பான நிலையை அடையவில்லை என்பதை அனைத்து சீன மற்றும் இந்திய மக்களும் பகிரங்கமாக கூறாவிட்டாலும், ஆபத்தை உணர்ந்துள்ளனர், சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
“இச்சிந்தனையின் எழுச்சிதான் இண்ட்ராப் அலை. கடந்த பொதுத்தேர்தலில் இந்த இண்ட்ராப் அலைதான் அரசியல் மாற்றங்களுக்கு இட்டுச்சென்றது. இண்ட்ராப் அலையின் தாக்கத்தால் சீன, இந்திய மக்களிடையே போராட்ட ஈடுபாடு வலுவடைந்துள்ளது”, என்று இண்ட்ராப்பின் எழுச்சியால் ஏற்பட்ட சிந்தனை மறுமலர்ச்சியை குவா சுட்டிக்காட்டினார்.
தாய்மொழி பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வதற்கு இரண்டு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். அவை:
1. தாய்மொழி பள்ளிகள் நிலைத்திருப்பதை உறுதிசெய்வதற்கு, அதற்குத் தேவையான நடவைக்கைகளை எடுப்பதற்கு பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.
2. தலைமைத்துவ இயக்கம் – பள்ளி ஆசிரியர்களின் தலைமைத்துவ இயக்கம் – தோன்ற வேண்டும். பள்ளி குழுக்கள் (School Committees) மற்றும் பள்ளி வாரியங்கள் மன்றம் (School Boards Association) ஆகியவை இணைந்து இந்த தலைமைத்துவ இயக்கத்தின் அச்சாணியாக இயங்க வேண்டும்.
சீன மொழி பள்ளிகளின் உரிமைப் போராட்டத்தில் தலைமைத்துவ இயக்கத்தை முன்நின்று நடத்திய சீனமொழி பள்ளி ஆசிரியர் லிம் லியான் கியாக் இன்று இந்நாட்டு சீன மக்களால் “மலேசிய சீனமொழி கல்வியின் உயிர்” (
The soul of Malaysian education) என்று போற்றப்படுகிறார் என்று குவா உணர்சி ததும்ப கூறினார்.
சீனமொழி கல்விக்காக போராடிய லிம் லியான் கியாக்கின் மலேசிய குடியுரிமையை மலேசிய அரசாங்கம் பறித்துவிட்டது.
இந்நாட்டில் தாய்மொழி கல்வி குறித்த கருத்துப் பரிமாற்றம் மிக அவசியமானது என்பதை வலியுறுத்திய டோங் ஜோங் இயக்கத்தின் பொதுச்செயலாளரான மோக், “தாய்மொழி பண்பாடு நிலைநிறுத்தப்பட வேண்டும்; அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்”, என்றார்.
“சமூகம் தாய்மொழியை நேசிக்கிறதா?”
சீன பிரதிநிதிகளின் உரைகளைத் தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் சீனமொழி பள்ளிகளில் இயங்கும் பள்ளி வாரியங்கள் தமிழ்மொழி பள்ளிகளில் இல்லாததும் அதற்கான ஆர்வம் காட்டப்படாததும் குறித்து பலர் கேள்வி எழுப்பினர்.
ஓர் அமைப்பு உருவாவது அவசியத்தின் அடிப்படையில். அந்த அவசியத்தின் முக்கியத்துவம் இப்போது உணரப்படுகிறது என்பதை இன்றையக் கலந்துரையாடல் காட்டுகிறது. பள்ளி வாரியங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம், எடுத்துக்காட்டாக: பாலர்பள்ளி அமைத்தல், என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், தாய்மொழி கல்வி ஒரு தேசிய விவகாரமாகும். பாதிப்பிற்குள்ளாகி வருபவை சீன, தமிழ்மொழி பள்ளிகள். “நாம் செய்ய வேண்டியது என்ன? சீன, தமிழ்மொழி பள்ளிகள் ஒன்றுகூட வேண்டும். தாய்மொழி கல்விக்காக போராட வேண்டும். நமக்குள் அதிகமான சந்திப்புகள் ஏற்பட வேண்டும்.”
தமிழ்மொழி பள்ளிகளின் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் சீனமொழி பள்ளிகளின் டோங் ஜோங் போன்று தேசிய அளவில் உருவாக்கம் பெற வேண்டும் என்றும் ஆலோசனை கூறப்பட்டது.
தாய்மொழி விவகாரத்தில் அரசியல் கட்சி வேறுபாடு வேண்டாம். பள்ளிகள், மாணவர்கள், அடுத்த 100, 200 ஆண்டுகளுக்கு, அதற்கு அப்பாலும், என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டும் நாம் ஆழ்ந்த ஈடுபாடும் கவனமும் செலுத்த வேண்டும்.
ஒரே கேள்வி: “சமூகம் தாய்மொழியை நேசிக்கிறதா?”, என்றார் லீ.
பெற்றோர்-ஆசிரியர் சங்கம் தேசிய இயக்கமாக வேண்டும்
பின்னர், தமிழ் அறவாரியமும் இடபுள்யுஆர்எப் ஆகிய அமைப்புகளின் பல்வேறு செயல்திட்டங்கள் குறித்து கா. சூரியனும் செல்வமலரும் விளக்கமும் கேள்விகளுக்குப் பதில்களும் அளித்தனர்.
இதன் பின்னர், கேள்வி மேல் கேள்விகள் எழுந்தன. கலந்துரையாடலில் பங்கேற்ற பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகள் தமிழ்பள்ளிகளின் அவலங்களை அவர்கள் நன்கு அறிந்துள்ளனர். ஆனால், ஏதோ ஒன்று அவர்களைச் செயல்பட விடாமல் தடுக்கிறது என்பது தெளிவாயிற்று.
ஒருவர் கேட்டார்: “எந்த அளவிற்கு அரசாங்கம் தமிழ்மொழிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது?”
பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் அடிக்கடி தேசிய அளவில் சந்திப்புகள் நடத்த வேண்டும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது.
எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு “எழுந்திருங்கள், செல்லுங்கள், வேண்டும் என்று அதிகாரத்தோடு கேளுங்கள்”, என்று கூறிய கா.ஆறுமுகம் பள்ளி வாரியம் அமைக்கப்படுவது மிக அவசியமானதும் என்றும் அது பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் கையில் இருக்கிறது என்றும் கூறினார்.
மேலும், பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் ஒரு தேசிய இயக்கமாக உருவெடுத்து இயங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள, மேல்நடவடிக்கைகளை எடுக்க தேசிய அளவினான பெற்றோர்-ஆசிரியர் சங்க அமைப்பு தேவைப்படுகிறது. அதனைச் செய்வதற்கு முதல் கட்டமாக ஒரு குழு அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இக்கலந்துரையாடலின் போது சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கி வரும், மேற்கொண்டு வழங்கவிருக்கும் உதவிகள் குறித்து எழுப்பட்ட கேள்விகளுக்கும் விவரம் அளிக்கப்பட்டது.
தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு குறித்து விவாதிப்பதற்காக சிலாங்கூர் மாநில அரசு சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களோடு கருத்துப் பரிமாற்றம் செய்வதற்காக ஜூலை மாதம் 31 ஆம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் மணி 2 லிருந்து மாலை மணி 5 வரையில் ஒரு சந்திப்பை நடத்தவிருக்கும் தகவல் வெளியிடப்பட்டது.
இச்சந்திப்பு நடக்கும் இடம்: State Legislative Assembly Division, 1st Floor, Annex Building, 40503 Shah Alam, Selangor.

தமிழ்ப் பள்ளிகளின் அவல நிலைக்க்கு காரணம் தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே.இவர்களில் பெரும்பாலோர் ம.இ.கா தலைவர்களாக இருப்பார்கள்.
சீனப் பள்ளிகள் போல் அல்லாமல் இன்னும் பள்ளியில் கட்சி பேதம் பார்த்து பள்ளியை நடத்தி வருகின்றனர்.இந்த நிலை மாறினால் தான் தமிழ்ப்பள்ளிகள் முன்னேற்றம் காண முடியும்.இது முடியுமா?.
சிலாங்கூர் மாநில அரசாங்கம் எவ்வளவு மானியம் கொடுத்தாலும் அதனை பெற்றுக்கொண்டு.பள்ளி நிருவாகம் கூட்டரசு அரசாங்கம் கையில் இருக்கிறது.எதிர்கட்சிகளுக்கு இங்கு இடமில்லை என்று மற்ற கட்சிகள் பள்ளியின் நலன் கருதி எது செய்தாலும் அதனை புறக்கணிக்கின்றனர்.ஆனால் தேசிய முன்னனியினர் எது செய்தாலும் கட்சியின் கொடியை பள்ளி வளாகத்தில் பறக்க விட்டு ஆராவாரம் செய்கின்றனர்.
இந்த நிலை மாறினால் தான் தமிழ்ப் பள்ளிகள் அனைத்தும் உருப்படும்.இல்லையேல் பழைய குருடி கதவை திறடி என்று போய் கொண்டே தான் இருக்கும்.
changes leeds to victory. vallga tamil makkal, tamil school and tamil mozhliy
பேசப்பட்ட அனைத்துக் கருத்துக்களும் சிந்திக்கப்பட வேண்டியவை. தமிழ்ப் பள்ளிகளின் மறுமலர்ச்சிக்கு எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கை சிறந்த தலைமைத்துப் பண்பைக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை அடையாளங்கண்டு அவர்களைத் தலைமையாசிரியராக நியமித்தலாகும். இந்நிலை உருவாகத வரை….தமிழ்ப் பள்ளிகளின் நிலையை யாராலும் மாற்ற இயலாது. மாநிலக் கல்வி இலாகாவில் தமிழ்ப் பள்ளிகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளும் இவ்வாரே நியமிக்கப்பட வேண்டும்…..
தமிழ்ப்பள்ளிகளின் அவலநிலைக்கு ஒரு சாராரைமட்டும் குறைகூறி பயனில்லை. நாம் அனைவரும்தான் இந்த அவலநிலைக்குக் காரணம். ஆலயத்திற்கு அள்ளி வழங்கும் நம்மவர்கள், கல்வி கண்களைத் திறக்கும் ஆலயமானப் பள்ளிகளுக்கு எவ்வளவு வழங்குகிறார்கள்!
அரசாங்கம் செய்ய வேண்டும்தான்! மறுப்பதற்கில்லை. தமிழர்களாகிய நம்முடைய கடமை என்ன? என்பதை மறந்து விடுகிறோம். கெஞ்சிக் கேட்டு பெறுவதுதான் நம் உரிமையா? சிந்திக்க வேண்டிய விசயம்!
since all over the world praising our mother tongue, what we as indian in malaysia doing to spread the beautiness of tamil. Basically, the language itself is our identity & tamil school is our identity. If we ourself never emphasize on the importance of tamil school, who will. Dont point fingers to others as you need to point at you first and adk yourself waht you have done for our society or tamil school.
Think before react…..