லிங்கின் கைது நடவடிக்கை, குடும்பத்தார் எதிர்பாராதது 30 Jul | செய்தி.

கிள்ளான் துறைமுக தீர்வையற்ற வாணிக வட்டாரத்தை மேம்படுத்துவது குறித்து அமைச்சரவைக்கு பொய்யான  தகவலை  வழங்கியதற்காக, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக், நேற்று பிற்பகல் கைது  செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டது, நாட்டு மக்களை மட்டுமின்றி, அவரது குடும்பத்தாரையும்  ஆச்சர்யத்தில்  ஆழ்த்தியுள்ளது.

இன்று மலேசியாகினியிடம் பேசிய லிங்கின் மூத்த புதல்வர் லிங் ஹீ லியோங், நேற்று பிற்பகல், போலீசார்  லிங்கின் வீட்டுக்கு வரும்வரை, அந்த கைது குறித்து குடும்பத்தாருக்கு எதுவுமே தெரியாது என்றார்.

“போலீசும், சட்டத்துறை தலைவர் அலுவலகமும் தொழில் ரீதியாக நடந்து கொண்டதற்காக நாங்கள் நன்றி  கூறுகிறோம்,” என்றாரவர்.

முன்னாள் மசீச தலைவர் நேற்றிரவு நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டதாகவும், நிலைமையை அமைதியாக  கையாள்வதாகவும் அவர் கூறினார்.

“நமது அன்புக்குரிய தாய்நாட்டின் நன்மை கருதி, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்ற  வலுவானதொரு பாரம்பரியத்தை நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம்,”என்றார்.

“எதுவும் மாறவில்லை, நமக்கு மறைப்பதற்கும் ஒன்றுமில்லை,” என்று கூறுகிறார் ஹீ லியோங். நேற்று ஒரு  மில்லியன் பிணப்பணத்தை அவர் செலுத்தினார்.

லிங்கின் வீட்டுக்கு போலீசார் வந்திறங்கியபோது குடும்பத்தார் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதையும் லிங்  நீதிமன்றத்தில் ஆஜராகும் முன்னர் என்ன நிகழ்ந்தது என்பதையும் கூற, ஹீ லியோங் மறுத்து விட்டார்.

மேலும் நேற்றைய சம்பவம், மசீசவின் நற்தோற்றத்துக்கும் மலேசியாவின் அரசியல் சூழ்நிலைக்கும்  ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து கருத்துரைக்கவும் அவர் மறுத்து விட்டார். அது, வழக்கு விசாரணையை  பாதிக்கலாம் என்றாரவர்.

மூத்த அரசியல் தலைவர்கள் வருகை

இதனிடயே டாமன்சாராவில் லிங்கின் வீட்டுக்கு வெளியே முகாமிட்டுள்ள  பத்திரிகையாளர்களின்படி, இன்று   நண்பகல் 12மணியளவில், அந்த முன்னாள் மசீச தலைவர், அவரது குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டிலிருந்து  வெளியேறி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு திரும்பியுள்ளார்.

அந்த பத்திரிகையாளர்களை நோக்கி கையசைத்த அவர், எந்த கேள்விக்கும் மறுமொழி கூற மறுத்து விட்டார்.

பிற்பகல் வாக்கில் கட்சியின் இரண்டு மூத்த அரசியல்வாதிகள் – முன்னாள் கிள்ளான் துறைமுக வாரியத்தின்  தலைவர் மைக்கல் சென், முன்னாள் மக்களவை துணைத் தலைவர் லிம் சீ செங் ஆகியோர் அவரது  இல்லத்துக்கு வருகை புரிந்தனர்.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply