போக்குவரத்து முன்னாள் அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக் குற்றம்சாட்டப்பட்டிருப்பது நாட்டின் நீதிபரிபாலனமும் சட்ட நடைமுறையும் நடுநிலையுடன் இருப்பதைப் பிரதிபலிக்கிறது. அவ்வாறு இல்லை எனக் கூறும் எதிர்கட்சிகளின் கூற்றை இந்நடவடிக்கைப் புறந்தள்ளியுள்ளது என துணைப்பிரதமர் முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.
ஆளும் தேசிய முன்னணியின் முன்னாள் அமைச்சரவை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பதன் வழி நாட்டின் நீதித்துறை வெளிப்படையாக இருக்கிறது என்பது உணர்த்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
“இது அதிகாரத் தரப்பு மேற்கொண்டிருக்கும் சட்ட நடவடிக்கை. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்கள் அதனை மேற்கொள்வர்.”
“எதிர்கட்சிகளுக்குச் சாதகமான முடிவுகள் இல்லாத போது அவை அறிக்கைகள் விடுவது வழக்கமானதுதான்.
“அநீதி என்றால் மட்டும் அவர்கள் அழுவார்கள்” என டாக்டர் லிங் நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது குறித்து கருத்துரைக்குமாறு கேட்கப்பட்ட போது முஹிடின் குறிப்பிட்டார்.
கிள்ளான் துறைமுகத் தீர்வையற்றப் பகுதி மேம்பாட்டுக்கு புலாவ் இண்டாவில் நிலம் கொள்முதல் செய்ததில் அரசாங்கத்திடம் தவறானத் தகவல் வழங்கியதாகவும் அதனால் அரசாங்கத்துக்கு இழப்பீடு ஏற்படக் காரணமாக இருந்ததாகவும் லிங் மீது புத்ராஜெயா செஷன் நீதிமன்றம் நேற்று குற்றம் சுமத்தியது.
கோலாலம்பூரில் 2010 ஆசியான் பள்ளி விளையாட்டில் பங்கேற்ற விளையாட்டாளர்களையும் அதிகாரிகளையும் பாராட்டி வரவேற்கும் நிகழ்சியில் கலந்துகொண்ட பின்னர் முஹிடின் செய்தியாளர்களிடம் பேசினார். நாட்டின் நீதித்துறையும் அதிகாரிகளும் எல்லா தரப்புக்கும் நியாயமாக நடந்துகொள்வர் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“குற்றம் மெய்பிக்கப்படும் வரை ஒருவர் குற்றமற்றவர் என்னும் கொள்கையை நாம் கடைபிடித்து வருவதால் அதனை அதிகாரத் தரப்பிடனும் நீதித்துறையிடமும் நாம் விட்டுவிடுவோம்,” என அவர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில் அமைச்சரவை உறுப்பினர்கள் தவறானத் தகவல்களைத் தருவதைத் தடுக்க சிறப்பு செயற்குழு உருவாக்கப்படுமா என வினவப்பட்டதற்கு நடப்பில் உள்ள முறை இன்னமும் சாத்தியமானது என முஹிடின் பதிலுரைத்தார்.
- பெர்னாமா

PM MANA PERGI,,,,,,,,,,,,,,,,,,ADAKAH INI SATU DRAMA…..