அரண்மனைக் கட்டுமான விசாரணை தொடர்பில் சுஹாகாம் பொதுப்பணி அமைச்சைச் சந்திக்கவிருக்கிறது 30 Jul | செய்தி.

புதிய அரண்மனை கட்டுமானப் பகுதியில் அந்நியத் தொழிலாளர்கள் துன்புறுத்தப்பட்ட விவகாரம் மீதான விசாரணை குறித்த மேல் விவரங்களை அறிய மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) பிரதிநிதிகள் பொதுப்பணி அமைச்சுடன் அடுத்த வாரம் சந்திப்பு நடத்தவிருக்கின்றனர்.

அந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பொதுப்பணி அமைச்சு எவ்வாறு பதிலுரைத்துள்ளது என்பதை விளக்க அமைச்சு சுஹாகாமுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக அதன் ஆணையர் முஹமட் ஷாஆனி அப்துல்லா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“அதற்குப் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எங்களிடம் அவர்கள் விளக்க விரும்புகின்றனர்,” என ஷாஆனி குறிப்பிட்டார்.

அந்த அந்நியத் தொழிலாளர்களின் வருந்தத்தக்க வாழ்க்கை மற்றும் வேலைச் சூழல் குறித்தும் அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாதது பற்றியும் ஸ்டார் நாளிதழ் ஜூன் 27-ஆம் தேதி செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து சுஹாகாம் அந்த விசாரணையைத் தொடங்கியது. NONE

மேலும் அந்த அந்நியத் தொழிலாளர்களிடம் இருந்து போலீஸ் பணம் வசூலித்தது குறித்தும் அவர்களின் வழக்குரைஞர் போலீஸ் புகார் செய்துள்ளார்.

அவ்விவகாரம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்எசிசி)-க்குக் கொண்டுச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

அவ்விவகாரம் குறித்து நடத்தப்பட்ட உள் விசாரணை முடிவுகளைத் தெரிவிக்கும்படி சுஹாகாம் பொதுப்பணி அமைச்சுக்கு விசாரணைக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.

இதுபோன்ற விவகாரங்களில் உரிய உடனடி ஒத்துழைப்புகள் அதிகாரிகளிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்ற தனது நிலைப்பட்டையும் சுஹாகாம் அந்தக் கடிதத்தில் குறிப்பிடிருந்ததாக ஷாஆனி கூறினார்.

“பாதுகாப்பு காரணங்கள்” எனக் கூறி அந்த மனித உரிமை கண்காணிப்புக் குழு சம்பந்தப்பட்ட இடத்தில் திடீர் பரிசோதனை மேற்கொள்ள அதன் குத்தகை நிறுவனமான மாயா மாஜூ சென்.பெர். தடைவிதித்துள்ளது.

பொதுப்பணி அமைச்சின் அனுமதி கிடைத்த பின்னரே சில வாரங்களுக்குப் பின் அந்த ஆணையம் அந்த பரிசோதனையை நடத்தியது.

செகாம்புட் எம்பியை சுஹாகாம் தொடர்புகொண்டது

சம்பந்தப்பட்ட பகுதியில் தொழிலாளர்கள் துன்புறுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் சிக்கிவிடாதிருக்க அது தாமதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

கடந்த ஜூனில் ஸ்டார் செய்தியாளர்களுடன் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்ற செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் அங்குக் குழந்தைகள் இருந்ததற்கான ஆதார புகைப்படங்களை ஊடகங்களுக்குக் காட்டினார்.NONE

சுஹாகாம் தன்னிடம் ஆதாரங்களைக் கோரியதைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமையன்று அந்தப் புகைப்படங்களை அந்த ஆணையத்துக்கு மின்னஞ்சல் செய்ததாக நேற்று தொடர்புகொண்டபோது லிம் தெரிவித்தார்.

அந்த விசாரணை குறித்த மேல் விவரங்களைத் தான் கோரியிருந்தும் சுஹாக்காம் இன்னும் எதனையும் வழங்கவில்லை என அவர் மேலும் கூறினார்.

போதிய ஆதாரங்கள் கிட்டதாததால் அது குறித்த மேல் விசாரணையை அந்த மனித உரிமை ஆணையம் தொடரமுடியாதிருப்பதாக ஷாஆனி இதற்கு முன் கூறியிருந்தார்.

ஆயினும் புதிய ஆதாரங்களைப் பெறுவதற்கு அந்த ஆணையம் எப்போதும் தயாராக இருப்பதாக மலேசியாகினியிடம் பேசும்போது ஷாஆனி தெரிவித்தார்.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply