- சூ சிங் சாய்
15 ஆண்டுகளுக்கு முன்னர் இன்று, பி. பட்டு காலமானார். அந்த வெற்றிடம் இது வரை நிரப்பப்படவில்லை. ஒன்றரை தசாப்தம் ஆகியும் கூட, அவர் வாழ்ந்த நாள், குறிப்பாக மக்கள் நீதிக்காக அவருடன் சேர்ந்து போராடும் வாய்ப்பினை பெற்றவர்கள் இதயங்களில் இன்றும் பசுமையாகவே உள்ளது.
1995 ஜூலையில், அவர் மரணித்திருக்காவிட்டால், ஜனநாயக செயல் கட்சியின் தலைமைச் செயலாளராகி இருப்பார். ஆனால் விதி வலியது. ஜசெக, தனது விசுவாசமிக்க புதல்வர்களில் ஒருவரை இழந்து விட்டது.- அந்த சூனியத்தை இன்று வரை யாராலும் நிரப்ப முடியவில்லை.
அவரை நினைவுகூர்வதற்கு, யதேச்சையாகக் கிடைத்த ஒரு கோப்பை எடுத்துப் புரட்டிப்பார்த்தேன். அதிசயமாகக் கண்ணில் பட்டது அவர் எழுதிய ஓர் அறிக்கை. அதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சித் தாவும் ஒழுங்கீன செயல்கள் குறித்து அவர் எழுதியிருந்தார். இவ்விவகாரம், இன்றுவரைக்கும் சர்ச்சைக்குரிய ஒன்றாகத்தான் இருக்கிறது.
3-1-1985 அன்று பி. பட்டு வெளியிட்ட பத்திரிகை அறிக்கை
“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜசெக உறுப்பினர்களையும் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் ‘விலை கொடுத்து வாங்குவதற்கு’ சிலர் கையாளும் கீழ்த்தரமான, தீய நோக்குடைய உத்திகள், ஆளும் நிருவாகத்தின் அரசியல் விபச்சாரமும் ஊழலும் எந்த அளவுக்கு மலிந்துள்ளன என்பதைக் காட்டுகிறது.
இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,மலாக்கா, குபு சட்டமன்ற உறுப்பினர் W.Y யோங்கின் அண்மைய துரோகச் செயல்.
ஜசெகவுக்கு எதிராக அரசியல் செல்வாக்கைப் பெறுவதற்கு தேசிய முன்னணி தலைமைத்துவம் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போகும் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.
தொடர்ச்சியாக நடத்தப்பட்ட மூன்று பொதுத் தேர்தல்களிலும், ஜசெக சார்பாகப் போட்டியிட்ட W.Y யோங்கை மலாக்கா மக்கள் மூம்முறை தேர்ந்தெடுத்தனர்.
ஜசெக சார்பாகப் போட்டியிட்டபோது, மலாக்கா மக்களுக்காகப் போராடப்போவதாகவும் அவர்களுக்கு ஒருபோதும் துரோகம் புரியப்போவதில்லை என்றும் அவர் வாக்குறுதி வழங்கியுள்ளார். அப்படி கூறியவர், சொந்த ஆதாயத்துக்காக மலாக்காவின் நலனுக்கும் மக்களுக்கும் துரோகம் செய்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் பணத்தாசைக்குப் பலியாகி, கட்சி மாறும் துரோகச் செயல்களுக்கு, மக்களாட்சி மரபுகளை கடைப்பிடிக்கும் எந்த நாடாளுமன்ற நடைமுறையும் அடிபணிந்து போகக் கூடாது.
எந்த பொதுத் தேர்தலிலும் அல்லது இடைத் தேர்தலிலும் வாக்காளர்களின் தேர்வுக்கு, ஓர் உயரிய மதிப்பைக் கொடுக்க வேண்டும். சொந்த ஆதாயத்துக்காக அல்லது புகழ்ச்சிக்காக ஒருவர், நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவியை, பண்டமாற்றாக கருதி, லைசென்சாக பயன்படுத்தக்கூடாது.
குறிப்பிட்டதொரு வேட்பாளரை, அவரது கட்சிக் கொள்கை அல்லது எந்த கட்சியையும் சாராதவராக இருந்தால், அவரது சொந்த கொள்கைகளின் அடிப்படையில்தான் வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
ஒரு வேட்பாளர் சார்ந்துள்ள கட்சி, எதற்காகப் போராடுகிறது என்பதை வைத்துதான் அவரை தங்களது நாடாளுமன்ற உறுப்பினராக அல்லது சட்டமன்ற உறுப்பினராக மக்கள் தேர்வு செய்கின்றனர். ஆனால் சில உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையை தகர்த்து, விலைபோகின்றனர்.
இத்தகையத் துரோகச் செயல்களுக்கு, சட்டமியற்றி ஒரு முடிவு கட்ட வேண்டும்.
அரசாங்கம், குறிப்பிட்ட வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் மக்களின் உரிமைகளை மதிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவோர், தேர்தலுக்குப் பின்னர், எந்த நோக்கத்துக்காகவும் கட்சி தாவுவதற்கு அனுமதிக்கக்கூடாது.
மக்களின் நம்பிக்கையைச் சிதறடிக்கும் இத்தகைய துரோகச் செயல்களுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே வழி, சட்டத்தை அறிமுகம் செய்வதுதான். அதாவது, ஒரு குறிப்பிட்ட கட்சி சின்னத்தில் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் ஒருவர், தமது இருக்கையை ராஜினாமா செய்து, பிறிதொரு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு புதிய ஆணையை பெற்றாலன்றி, கட்சி தாவமுடியாது.
மேலும் அரசியல் கட்சிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் பேராளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு அல்லது பதவி விலகும்போது, புதிய தேர்தலை நடத்த வேண்டும்.
இத்தகையச் சட்டம்தான், நமது நாட்டின் அரசியலில் தலைவிரித்தாடும் அரசியல் விபச்சாரத்தையும் ஊழலையும் முறியடிப்பதற்கான ஒரே வழி.”
- Malaysia Today

//ஜசெக, தனது விசுவாசமிக்க புதல்வர்களில் ஒருவரை இழந்து விட்டது// என்பதை விட இந்நாடு மாபெரும் செயல் வீரரை, லட்சியவாதியை இழந்து விட்டது என்று குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும். பக்காத்தான் மாநில அரசாங்கங்கள் இணைந்து அவரின் நினைவாக ஒரு அறக்கட்டளை நிறுவி செயல் படுத்தினால் சிறப்பாக இருக்கும்.
பக்காத்தான் மாநில அரசாங்கங்கள் இணைந்து அவரின் நினைவாக ஒரு அறக்கட்டளை நிறுவி செயல் படுத்தினால் சிறப்பாக இருக்கும்.