ஒரே மலேசியாவில் ஒரே பள்ளி! 12 Jul | கருத்து.

 -ஆறு. நாகப்பன்

satu malaysia தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அம்னோ அரசைப் பாராட்டாமல் இருக்க முடியாது. தேசிய ஒருமைப்பாடு நம்மைப் போன்ற பல இன மக்கள் வாழும் நாட்டுக்கு மிக மிக அவசியம். உண்மையில் உலகில் எந்த நாடும் இப்போது பல இன நாடுதான். ஒற்றை இனம் மட்டும் வாழும்படி எந்த நாடும் தாண்ட முடியாத வேலிகளால் பிரிக்கப்பட்டிருக்கவில்லை.

ஒருமைப்பாட்டை உருவாக்க இரண்டு வழிகள்தாம் உள்ளன. ஒன்று அனைவருக்கும் சமமான உரிமைகள் வழங்கி வாழ வைத்தல். இன்னொன்று அடங்காதவர்களை அடித்து ஒடுக்கி ஒரு கூட்டுக்குள் அடைத்தல். இவற்றுள் இரண்டாவது வழியைக் கடைப்பிடிக்கிறது மலேசியா. இந்த வழியில் மறைமுகமாகவும் நேரடியாகவும் பல கட்டாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அரசாங்கத்தின் இந்த மாபெரும் திட்டத்தின் கிளைகளில் ஒன்றுதான் ஒரே மலேசியாவில் ஒரே பள்ளியை உருவாக்குதல். கடந்த ஆண்டு முதலே இந்தச் ‘சுலோகம்’ ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இதில் பல ‘கட்டாயங்கள்’ மறைமுகமாகச் செயல்படுத்தப்படுவதை ம.இ.கா.வோ ம.மு.க.வோ பொருட்படுத்தவே இல்லை. ஏனெனில் அவர்கள் வேறு பல ‘அதி முக்கியமான’ பணிகளை உடனடியாகச் செய்து முடிக்க வேண்டியுள்ளது.

ஒரே பள்ளி

மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் வரலாற்றுத் துறைக் கல்வியாளர் கூ கே கிம் ஒரே பள்ளித் திட்டத்தின் அரசு முகவராகக் கடுமையாக உழைத்தார். தாய்மொழிக் கல்வி பெறாத இவர் வேறு எப்படித்தான் சிந்திப்பார் என்று சீனர்கள் இவர் பேச்சை உடனே புறக்கணித்தனர்.

தமிழ், சீனப் பள்ளிகளை மூடிவிட்டால் தேசிய ஒருமைப்பாட்டை ஆறு ஆண்டுகளில் உருவாக்கிவிடலாம் என்று அவர் கூறினார்.  தேசிய ஒருமைப் பாட்டுக்கான திறவுகோல் ஒரே பள்ளியில் இருப்பது உண்மை  என்றால் தேசியப் பள்ளிகளில் படிக்கும் இந்திய மாணவர்களில் ஐம்பது விழுக்காட்டினர் எப்போதோ தேசிய இனத்தோடு கலந்து போயிருக்க வேண்டும். மேலும் ஆறு ஆண்டுகளுக்குப் பின் இடைநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, பல்கலைக் கழகங்கள் ஆகிய அனைத்துக் கல்வி நிலையங்களிலும் எல்லா இனத்தினரும் கிட்டத்தட்ட பதினொரு ஆண்டுகள் கலந்தே படிக்கின்றனர், பழகுகின்றனர்.

இப்படிக் கலந்து பழகும் இவர்களை ஒன்றுபடாமல் தடுப்பது எது என்பது யாருக்கும் தெரியாத ரகசியம் அல்ல.

இடைநிலைப் பள்ளி முதலே  மெல்லியதாக எழுப்பப்படுகிறது  இனவேற்றுமைச் சுவர். கல்வி வாய்ப்பு, கல்வி உதவி, தேர்வு, மேற்படிப்பு, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு இப்படி எல்லாவற்றிலும் சிறப்புச் சலுகை சமுதாயத்தில் பலர் தகுதி இல்லாமலேயே எல்லா வாய்ப்புகளும் பெறுகின்றனர். தகுதி இருந்தும் வாய்ப்பு பெறாத இளையர் மனத்தில் ஒற்றுமையை விதைக்க வேண்டிய அரசு வேற்றுமையை அழுத்தமாக ஊன்றிவிடுகிறது.

ஊடுருவும் ஒரே மலேசியா

சிறுபான்மை மக்களின் உரிமைகளில் ஊடுருவிப் பாய்கிறது ஒரே மலேசியா. ஒரே பள்ளித் திட்டத்தை அறிவித்து மக்கள் கருத்தைச் சோதித்த அரசு அதே பணியில் வேறு சில அம்புகளை விட்டு எதிர்வினைகளைச் சோதித்துக் கொண்டிருக்கிறது.

1. மதிப்பற்ற தாய்மொழிப் பாடங்கள்

கடந்த ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் தமிழ், சீன மொழியும் இலக்கியமும் புள்ளி மதிப்பு பெறமாட்டா என்று அறிவிக்கப்பட்டது.

இதன் விளைவு எப்படி இருக்கும்?

இரண்டு பாடங்களை மட்டும் நாம் இழக்கவில்லை. மாணவர்கள் இந்தப் பாடங்களில் காட்டும் ஈடுபாடு தானே குறையும். ஐந்தே ஆண்டுகளில் மாணவர் பற்றாக்குறையைத் தொடர்ந்து தமிழ், சீன மொழிகளைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பற்றாக் குறை ஏற்படும். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் இவற்றுக்கான இடங்களை நிரப்ப மாணவர்கள் இல்லை என்று காரணம் காட்டி அந்தப் பகுதிகள் மூடப்படும்.

இதனால் தமிழ், சீனப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைச் செயற்கையாக உண்டாக்க முடியும்.  இப்பள்ளிகளின் ‘மெதுமரணத்திற்கான’ திட்டங்களில் ஒன்று இது. இதன் விளைவாக ஒலி, ஒளி, அச்சு ஊடகங்கள் அனைத்திலும் தமிழ், சீன மொழிகள் மெல்லச் சாகும்.

2. தமிழ், சீனப் பள்ளிகளுக்கு நிலம் இல்லை

அண்மையில் கல்வி அமைச்சர் மிகுந்த துணிவோடு ஓர் அறிவிப்பைச் செய்தார். தேசியப் பள்ளிகளுக்கான நில ஒதுக்கீடு முன்னிலை பெறுவதால் தமிழ், சீனப் பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்குவது சாத்தியப்படாது என்றார். இதனால் தமிழ், சீனப் பள்ளிகளை அரசு இனி ஆதரிக்காது என்பது வெளிப்படையாகச் சொல்லப்பட்டது.

3. வாரியம் அமையுங்கள்

கல்வி அமைச்சரின் அடுத்த அறிவிப்பு, தமிழ், சீனப் பள்ளிகள் தங்களுக்கென்று வாரியங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது. தற்போது சீனப் பள்ளிகளின் வாரியங்கள் பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதியை வழங்கும் பெரும் பொறுப்பைப் பல ஆண்டுகளாகச் செய்து வருகின்றன. இதைப் போல் தமிழ்ப் பள்ளிகளும் செய்ய வேண்டும் என்பதன் உட்பொருள் என்ன? இப்பள்ளிகளுக்கு இப்போது அரசு அளித்து வரும் நிதியையும் சுருக்குவதா?  இதன் விளைவு என்னவாய் இருக்கும்?

தமிழ், சீனப்பள்ளிப் பெற்றோர்கள் வாரியங்கள் வழி தங்கள் பள்ளிகளைப் பராமரிப்பதில் களைப்பு அடைந்தால் இப்பள்ளிகள் தாமே மரணக்குழியில் விழுந்துவிடும்.

4. யூ.பி.எஸ்.ஆர். தேர்வு நீக்கம்

இதன் மூலம் மாணவர்களின் கற்றல் வேகத்தைக் கட்டுப்படுத்துவது அரசின் நோக்கமாக உள்ளது. யூ.பி.எஸ்.ஆர். தேர்வின் அடிப்படையில் இடைநிலைப் பள்ளியில் வகுப்புகள் ஒதுக்கப்படுகின்றன.  இத்தேர்வு பொதுத்தேர்வாக இல்லாமல் பள்ளித் தேர்வாக மட்டும் இருக்குமானால் இடைநிலைப் பள்ளியில் இத்தேர்வு முடிவு எந்த மதிப்பையும் பெறாது. இதனால் தமிழ், சீன மாணவர்கள் இடைநிலைப் பள்ளிகளில் ‘கடைசி’ வகுப்புகளுக்குத் தள்ளப்படுவார்கள். இவர்களின் கற்றல் வேகத்திற்குத் திட்டமிட்ட தடைகள் இவை.

தமிழ், சீனப் பள்ளிகளுக்கான ‘மெதுமரணத் திட்டத்தின்’  வெளிப்பாடுகளே கல்வி அமைச்சரின் அண்மைக் கால அறிவிப்புகள் என்பதை ஊன்றிக் கவனித்தால் உணர முடியும்.

யூ.பி.எஸ்.ஆர். தேர்வு பற்றிய மக்கள் கருத்தைத் திரட்டுகிறது ம.சீ.ச. தலைவரை வீழ்த்துவதற்கு மக்கள் கூட்டத்தைத் திரட்டுகிறது ம.இ.கா.

விரைவில் வேண்டுகோள், வருத்தம், கண்டிப்பு, மகஜர், சந்திப்பு என்று நமது மாபெரும் தமிழ் காக்கும் இயக்கங்களின் அறிக்கைகள் பத்திரிகைப் பக்கங்களை நிறைக்கும். இதைத் தவிர கடந்த 53 ஆண்டுகளில் எதைத்தான் நாம் சாதித்திருக்கிறோம்?

(விடுதலைமலேசியாஇன்று)

 
You can leave a response, or trackback from your own site.

6 Responses to “ஒரே மலேசியாவில் ஒரே பள்ளி!”

  1. சிவபாலன் பூங்காவனம் says:

    உங்களின் கருத்துகளை நான் வரவேற்கிறேன்.

  2. suresh says:

    What u hv mentioned here is exactly will happen when all non-malays schools closed down. Bravo…….go ahead and spread this info to everyone

  3. Mohan says:

    Very nice article.. But still this Indian community support the Barisan just for “Goat curry and Hampers..” In Bagan Pinang Election.. Specially in Siliau and Bradwall area.. It all because of MIC..

  4. ravi says:

    indians should think like chinese….

  5. yellaichamy says:

    actually indians lack of trustworthy leaders, very selfish so called leaders have already diverted the innocent hearts to corrupted minds.A clean postmortum report can help the community back in right track.

  6. மு. சிதம்பரம் says:

    திரு நாகப்பன் தமது கட்டுரையில் நமது நடப்பு எதிர்கால நிலைகளை மிகச் சிறப்பாக விவரித்துள்ளார். அரசியல் கட்சிகளையும் இயக்கங்களையும் நம்பி பயனில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. உணர்வுள்ளோரணைவரும் நடவடிக்கையில் இறங்க வேண்டும். சின்னப் பிரச்சினை என்று எதையும் விட்டு விடக்கூடலாகாது.

Leave a Reply