ஜூன் மாதம் 10 ஆம் தேதி பிரதமர் நஜிப் நாடாளுமன்றத்தில் மலேசியாவின் 10 ஆவது ஐந்தாண்டு திட்டத்தைத் தாக்கல் செய்தார். அத்திட்டத்தில் இந்திய மலேசியர்களின் முன்னேற்றத்திற்கு என்ன திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன?
இந்தியர்கள் இத்திட்டத்தினால் பயனடைவார்களா என்பது குறித்து ஒரு கலந்துரையாடல் நடத்தப்படவிருக்கிறது.
ரிம230 பில்லியன் திட்டம்
10ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகாலத்தில் மலேசியா அரசாங்கம் நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் மேம்பாட்டிற்காக ரிம230 பில்லியனைச் செலவிடும்.
அந்த ரிம230 மில்லியனில் 55 விழுக்காடு பொருளாதாரத்துறைக்கும் 30 விழுக்காடு பொதுநலத்துறைக்கும் 10 விழுக்காடு பாதுகாப்புத்துறைக்கும் 5 விழுக்காடு பொது நிருவாகத்துறைக்கும் செலவிடப்படும்.
10ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ள ரிம230 பில்லியனின் ஒவ்வொரு சென்னும் மலேசிய மக்கள் ஒவ்வொருவரின் மேம்பாட்டிற்காக செலவிடப்படும்.
ஆண்டிற்கு 6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி காண்பது இத்திட்டத்தின் இலக்காகும். இதனை அடைவதற்கு தனியார்துறையின் ஈடுபாடு அவசியமாகுமாதால் அதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரையில், 52 உயர்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், ரிம15 பில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படவிருக்கும் ஏழு நெடுஞ்சாலைத் திட்டங்கள், ரிம10 பில்லியன் செலவில் நிலக்கரியினால் இயங்கும் இரண்டு மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் ரிம 10 பில்லியன் செலவில் சுங்கைபூலோவில் ரப்பர் ஆராய்ச்சி கழகத்திற்குச் சொந்தமான 3,300 ஏக்கர் நிலத்தை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
பூமிபுத்ராக்களுக்கான திட்டங்கள் தொடரும்
பூமிபுத்ராக்கள் மேம்பாட்டு திட்டங்கள் வளர்ச்சி மற்றும் பகிர்ந்தளித்தல் ஆகிய கருத்துடன் சந்தைக்கு
ஏற்புடைய, தேவை அடிப்படையிலான, தகுதி அடிப்படையிலான மற்றும் வெளிப்படையிலான கொள்கைகளுடன் தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
அத்திட்டங்கள் எவ்வாறு அமல்படுத்தப்படும் என்பதும் பிரதமர் தாக்கல் செய்த 10ஆவது திட்டத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
மற்றவர்கள் மீது கவனம் செலுத்தப்படும்
சாபா, சரவாக் ஆகிய மாநிலங்களின் காட்டுப்பகுதிகளில் வாழும் வசதியற்ற, பின்தள்ளப்பட்ட மக்கள் மற்றும் தீவகற்ப மலேசியாவின் ஓராங் அஸ்லி மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மீதும் கவனம் செலுத்தப்படும்.
தோட்டங்களில் வாழும் மக்கள் மற்றும் தோட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், தண்ணீர் விநியோகத்திற்கான வசதிகள் கொண்ட இடத்திலிருந்து 5 கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவிலுள்ள 1,000 ஏக்கர் அளவிலான 182 தோட்டங்களுக்கு ரிம109 மில்லியன் செலவில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவது கவனிக்கப்படும்.
பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்ட மாணவர்களின் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கத்தில் அனைத்து இனத்திற்கும் தொழில் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
சீன புதுக்கிராம குடியிருப்பாளர்களுக்கு உதவிகள் வழங்கப்படும். அவர்கள் தங்களுடைய
நிலத்திற்கான நிலவரியைக் கட்டுவதற்காக கடன் பேங் சிம்பானான் நேசனல் மூலமாக வழங்கப்படும். தொடக்கமாக இதற்காக ரிம100 மில்லியன் ஒதுக்கப்படும்.
இவற்றுடன், இந்தியர், சாபா மற்றும் சரவாக் பூமிபுத்ராக்கள் ஆகியோரின் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுக்கள் இச்சமூகங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தொடர்ந்து கவனிக்கும்.
பள்ளிகளுக்கு உதவி
அரசாங்கப் பகுதி உதவி பெறும் பள்ளிகளைப் பழுதுபார்த்தல் மற்றும் தரம் உயர்த்துதல் ஆகியவற்றுக்காக ரிம280 மில்லியன் 2011 மற்றும் 2012 ஆண்டுகளில் செலவிடப்படும்.
இத்திட்டத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில் அரசாங்கப் பகுதி உதவி பெறும் ஒவ்வொரு வகைப்பள்ளிக்கும் – சீன, தமிழ், சமய மற்றும் கிறிஸ்துவ பள்ளிக்கூடங்கள் – ரிம70 மில்லியன் நிதி ஒதுக்கீடு அளிக்கப்படும்.
மேலும், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களைச் செலுத்துவதற்காக 1,900 அரசாங்கப் பகுதி உதவி பெறும் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதமும் ரிம2,000 வரையில் உதவி வழங்கப்படும்.
அனைவரும் வருக!
இத்திட்டத்திற்கு இந்திய அரசியல் கட்சியினரில் பலர் மிகுந்த உற்சாக வரவேற்பை அளித்துள்ளனர். “எல்லாருக்கும் மகிழ்ச்சி தரும் திட்டம்”, என்றும் வருணிக்கப்பட்டுள்ளது.
“இதில் ஒன்றுமே இல்லை”, என்று இந்திய வர்த்தக அமைப்பு ஒன்றும் கூறியுள்ளது.
இந்த 10ஆவது மலேசிய திட்டத்தில் இந்தியர்களின் எதிர்பார்ப்பு என்ன? கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் என்ன? எந்த அளவிற்கு அந்த வாக்குறுதிகள் இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன? இந்தத் திட்டத்தினால் எந்த அளவிற்கு இந்தியர்கள் பயன் அடைவர்?
இவற்றை மக்களுக்கு விளக்கும் நோக்கத்தோடும் மக்களின் கருத்தை அறிந்துகொள்வதற்காகவும் 10ஆவது மலேசிய திட்டம் பற்றிய ஒரு கலந்துரையாடல் எதிர்வரும் திங்கள்கிழமை கோலாலம்பூரில் நடத்தப்படும்.
இந்தக் கலந்துரையாடல் செம்பருத்தி-மலேசியாஇன்று.கோம் ஏற்பாட்டில் நடைபெறுகிறது.
இரவு மணி 8.00 க்கு தொடங்கும் இக்கலந்துரையாடல் தமிழில் நடத்தப்படும். அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
10ஆவது மலேசிய திட்டத்தினால் இந்தியர்கள் அடையப்போகும் நன்மைகள் ஏதேனும் உண்டா என்பது குறித்து பொருளாதார வல்லுனர் (மலாயா பல்கலைக்கழக முன்னாள் பொருளாதார விரிவுரையாளர்) டாக்டர் ஆர். தில்லைநாதன், மலேசிய சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் எஸ். அருட்செல்வன், டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு மற்றும் பிஎஸ்எம் சுங்கைசிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் ஆகியோர் உரையாற்றவிருப்பவர்களில் அடங்குவர்.
இக்கலந்துரையாடலை மலேசிய மனித உரிமைகள் அரசு சார்பற்ற அமைப்பான சுவாராமின் தலைவர் கா. ஆறுமுகம் வழிநடத்துவார்.
கலந்துரையாடல் குறித்த விபரங்கள்:
நாள் : 28.06.2010 (திங்கள்கிழமை)
நேரம் : இரவு மணி 7.30க்கு தொடங்கும்
இடம் : சீன அசெம்பிளி மண்டபம், கோலாலம்பூர்
தொடர்பு : கா.ஆறுமுகம் 016-2108770 மற்றும் செம்பருத்தி 03-26980622

மண்ணாங்கட்டிதான் இருக்குது! ஏனையா நேரத்தை விரயம் செய்கிறீர்கள்? இல்லாததை இருப்பதாக இட்டுக்கட்டாதீர்கள் மேதாவிகளே!
ராபின்
” ரிம230 பில்லியன் திட்டம்
10ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகாலத்தில் மலேசியா அரசாங்கம் நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் மேம்பாட்டிற்காக ரிம230 பில்லியனைச் செலவிடும் ”
இந்த ரிம230 பில்லியன் பணம் எத்தனை அரசியல்வாதிகளின் (pocket)கைப்பைக்குள் நுளைய போகிறதோ!! அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும் ?