ஒரு தரப்பு இஸ்லாத்திற்கு மாறினாலும் குழந்தைகள் பராமரிப்பு அல்லது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட குடும்ப விவகாரங்களை விசாரிக்கும் நீதிபரிபாலன அதிகாரம் தனக்கு இருப்பதாக ஈப்போ உயர் நீதிமன்றம் இன்று வரலாற்றுப் பூர்வமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
இஸ்லாத்திற்கு மதம் மாறிய தமது 41 வயது கணவர் இஸ்லாத்திற்கு மதம் மாற்றிய தமது மூன்று பிள்ளைகளை தனது பராமரிப்பில் எடுத்துக் கொள்வதற்கு 35 வயதான இந்து சமயத்தைச் சேர்ந்த தாய் சமர்பித்திருந்த விண்ணப்பத்தை நீதிபதி வான் அப்ரா வான் இப்ராஹிம் அனுமதித்தார்.
கிட்டத்தட்ட ஓர் ஆண்டாக நடத்திய சட்டப் போராட்டத்திற்கு பின்னர் எம் இந்திராகாந்தி என்ற அந்த பாலர் பள்ளி ஆசிரியை, 13 வயதான புதல்வி தேவிதர்ஷ்னி, 12 வயதான புதல்வன் கரண் தினேஷ், 2 வயதான பிரசன்னா தீக் ஷா, ஆகிய மூன்று பிள்ளைகளையும் பராமரிக்கும் அனுமதியைப் பெற்றார்.
தமது முன்னாள் கணவரான கே பத்மநாபன் அல்லது முகமட் ரிட்துவான் அப்துல்லா தமது மூன்று பிள்ளைகளுடன் 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இஸ்லாத்துக்கு மதம் மாறியதாக இந்திரா தமது விண்ணப்பத்தில் கூறியிருந்தார்.
இரண்டு மூத்த பிள்ளைகளும் தாயுடன் இருந்த வேளையில் இளைய பிள்ளை தந்தையின் பராமரிப்பில் இருந்தது.
பின்னர் அந்த மூன்று பிள்ளைகளையும் தனது பராமரிப்புக்கு அனுமதிக்குமாறு ஷாரியா நீதிமன்றம் வழியாக முகமட் ரிட்துவான் விண்ணப்பித்தார். அதனை ஷாரியா நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு குழந்தைகளின் பராமரிப்பை அவருக்கு வழங்கியது.
ஷாரியா நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இந்திரா பின்னர் விண்ணப்பம் செய்து கொண்டார். இந்திராவைப் பிரதிநிதித்த நான்கு வழக்குரைஞர்களான கே சண்முகா, எம் குலசேகரன், ஏ சிவநேசன், பாஹ்ரி அஸாட் ஆகியோரையும் அவரது முன்னாள் கணவரைப் பிரதிநிதித்த நான்கு வழக்குரைஞர்களையும் சந்தித்த பின்னர் தமது அறையில் அப்ரா தமது தீர்ப்பை வழங்கினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற ஒரு வழக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இஸ்லாத்திற்கு தமது கணவர் மதம் மாறிய பின்னர் குழந்தைகளைப் பராமரிக்க விரும்பிய தாய் சுபாஷினிக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கியதின் அடிப்படையில் இந்த வழக்கை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருப்பதாக வான் அப்ரா தீர்ப்பளித்திருப்பதாக சிவநேசன் கூறினார்.
கடைசியாக ஜனவரி 22ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது நீதிமன்றம் உத்தரவிட்டபடி இளையப் பிள்ளையை தந்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு வராதது குறித்து நீதிபதி ஏமாற்றம் தெரிவித்ததாக குலசேகரன் கூறினார்.
ஆனால் இந்திரா நீதிமன்றம் கேட்டுக் கொண்டவாறு மற்ற இரண்டு பிள்ளைகளையும் இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வந்திருந்தார்.
தந்தை அல்லது பிரசன்னாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மற்ற பிரதிநிதி உடனடியாக அந்தக் குழந்தையைத் தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தந்தை வாரத்திற்கு ஒரு நாள் பிரசன்னாவைப் பார்க்கலாம் என்றும் வான் அப்ரா தீர்ப்பளித்ததாகவும் சிவநேசன் கூறினார்.
“தந்தை குழந்தையை ஒப்படைக்க மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவர் மீது எடுக்கப்படும்”, என்றும் சிவநேசன் எச்சரித்தார்.
இதற்கு முன்னர் தமது மூன்று பிள்ளைகளின் மதம் மாற்ற சான்றிதழ்களை ரத்துச் செய்ய வேண்டும் என்று இந்திரா சமர்பித்த விண்ணப்பம் மீது இரண்டு தரப்புக்களின் விளக்கத்தை செவிமடுப்பதற்கு வான் அப்ரா ஏப்ரல் 2ம் தேதியை நிர்ணயம் செய்தார்.
பிரசன்னாவிடமிருந்து கடந்த ஓர் ஆண்டாக தாம் பிரிந்து வாழ்ந்த சோகம் முடிவுக்கு வந்திருப்பது குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக நீதிமன்றத்துக்கு வெளியில் நிருபர்களிடம் பேசிய இந்திரா கூறினார்.
பல முந்திய வழக்குகளில் ஷாரியா நீதிமன்றத் தீர்ப்புக்களில் தலையிட உயர் நீதிமன்றங்கள் விரும்பாததுடன் ஒப்பிடுகையில் நீதிபதி வான் அப்ரா துணிச்சலாக அந்த முடிவைச் செய்துள்ளதாக குலசேகரன் கூறினார்.
“தங்களது கணவர்கள் இஸ்லாத்திற்கு மதம் மாறியதால் தங்களது பிள்ளைகளைப் பராமரிக்க முடியாமல் போன மற்ற தாய்மார்களுக்கு இந்த வரலாற்றுப்பூர்வ தீர்ப்பு பெரிதும் உதவும்.”
