ஜிஎஸ்டி அமலாக்கத்தில் எந்தத் தாமதமும் இருக்காது- ஹுஸ்னி 11 Mar | செய்தி.

சர்ச்சைக்குரிய ஜிஎஸ்டி என்ற பொருள், சேவை வரியின் அமலாக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை இரண்டாவது நிதி அமைச்சர் ஹுஸ்னி ஹானாட்ஸ்லா இன்று நிராகரித்துள்ளார்.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜிஎஸ்டியின் பல அம்சங்கள் குறிப்பாக அந்த வரி குறித்த பொது மக்களுடைய புரிந்துணர்வும் அதன் அமலாக்கமும் விவாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

“நாங்கள் ரத்துச் செய்யப்பட்டதாகக் கூறவில்லை. மக்கள் அதன் அமலாக்கம் தொடர்பில் எந்த அளவுக்கு அறிந்து வைத்துள்ளனர். எந்த அளவுக்கு நாம் ஆயத்தமாக இருக்கிறோம் என்ற விஷயங்களை விவாதித்தோம்”, என்று அவர் கூறினார்.

ஜிஎஸ்டியின் அமலாக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது பற்றிக் கருத்துரைக்குமாறு நிருபர்கள் கேட்டுக் கொண்ட போது ஹுஸ்னி அவ்வாறு தெரிவித்தார்.

“நாங்கள் பின்னர் சிறிய பிரச்னைகளைக் கூட எதிர்நோக்க விரும்பவில்லை. அவை மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடும்.”

ஜிஎஸ்டி அடுத்த ஆண்டு அமலாக்கப்படவிருக்கிறது. நடப்பு விற்பனை சேவை வரிக்குப் பதிலாக 2011ம் ஆண்டு தொடக்கத்தில் நான்கு விழுக்காடு அளவில் ஜிஎஸ்டியை அறிமுகம் செய்யப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை

புதிய வரி மீது இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று ஹுஸ்னி மேலும் கூறினார்.

ஏழைகளாக இருந்தாலும் சரி பணக்காரர்களாக இருந்தாலும் சரி அனைத்து மலேசியர்களும் அந்த வரியைச் செலுத்த வேண்டும் என்பதால் ஏழைகளுக்கு அந்த வரி சுமையாக இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் வாதாடுகின்றன.

அடுத்தடுத்த ஆண்டுகள் ஜிஎஸ்டி வரி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்னும் அச்சமும் நிலவுகிறது.

 
You can leave a response, or trackback from your own site.

One Response to “ஜிஎஸ்டி அமலாக்கத்தில் எந்தத் தாமதமும் இருக்காது- ஹுஸ்னி”

  1. madathuravi says:

    ithu மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடும்.

Leave a Reply