அண்மையை மாற்றங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் வகையில் கூட்டரசு-மாநில உறவுகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று தெங்கு ரசாலி ஹம்சா கேட்டுக் கொண்டுள்ளார்.
மலாய் ஆட்சியாளர்கள் 1947ம் ஆண்டு மலாயாக் கூட்டரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது எதிர்கால சூழ்நிலைகளை முன்னறியவில்லை என்று அவர் சொன்னார்.
“ஆகவே அந்த விஷயத்தை மீண்டும் ஆய்வு செய்வது நல்லது”, என்று அவர் கோலாலம்பூரில் வழக்குரைஞர்கள் மன்றத்தின் அரசியலமைப்புக் குழு ஏற்பாடு செய்த கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.
“25 ஆண்டுகளுக்கு முன்பு இன்னும் உயிருடன் இருக்கும் ஒர் ஆட்சியாளரைச் சந்தித்த போது உறவுகளில் ( கூட்டரசு அரசாங்கம்-மாநிலம்) மாற்றங்கள் தேவை என்று நான் அவரிடம் யோசனை தெரிவித்தேன்.”
கூட்டரசு முறையைப் பின்பற்றும் ஆஸ்திரேலியா, கனடா போன்ற மற்ற நாடுகள் கூட தங்களது ஒப்பந்தங்களில் மாற்றங்களைச் செய்துள்ளதாக தெங்கு ரசாலி குறிப்பிட்டார்.
“ஆட்சியாளர் மன்றத்திலிருந்து வரும் திருத்தங்களுடன் நாம் அந்த மாற்றங்களை செய்யலாம்.”
“தங்களுக்குப் போதுமான வளங்கள் இல்லை என்று சில மாநில அரசுகள் குறிப்பாக பக்காத்தான் ராக்யாட் கூட்டணி ஆட்சி புரியும் மாநிலங்கள் புகார் செய்வதால் அந்த மறு ஆய்வுக்கு தாம் யோசனை கூறுவதாக தெங்கு ரசாலி குறிப்பிட்டார்.
கூட்டரசு அரசாங்கம் கிளந்தானுக்கும் திரங்கானுவுக்கும் எண்ணெய் உரிமப் பணத்தை மறுத்த விஷயமும் அதில் அடங்கும்.
