பெஹ்ராங் பிரதிநிதி: குடும்பத்தில் ஒருவராக பிஎன் எங்களைக் கவனித்துக்கொள்கிறது 9 Feb | செய்தி.

 ஓராண்டுக்குமுன், பேராக் பக்காத்தான் ரக்யாட் அரசு கவிழக் காரணமாக இருந்த பெஹ்ராங் சட்டமன்ற உறுப்பினர் ஜமாலுடின் முகமட் ராட்சி அதற்காக எள்ளளவும் வருத்தம் கொள்வதாகத் தெரியவில்லை.

பக்காத்தான் பிரதிநிதியாக இருந்து பாரிசான் நேசனல்-ஆதரவாளராக மாறிய ஜமாலுடின், தாம் சரியான இடத்துக்கு வந்திருப்பதாக நம்புகிறார்.

மலேசியாகினியிடம் தொலைபேசிவழி பேசிய அவர், “அவர்கள் எங்களுக்கு உரிய மதிப்பளிக்கிறார்கள்”, என்றார்.

“குடும்பத்தில் ஒருவர்போல் எங்களைக் கவனித்துக் கொள்கிறார்கள். எல்லா விவகாரங்களிலும் எங்களின் கருத்தைக் கேட்கிறார்கள்”, என்றவர் சொன்னார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 4-இல், பக்காத்தான் கூட்டணியைவிட்டு விலகி பாரிசானுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களாக மாறிய மூன்று பக்காத்தான் பிரதிநிதிகளில் ஜமாலுடினும் ஒருவராவார்.

மற்ற இருவர், முகமட் ஒஸ்மான், முகமட் ஜைலு (சங்காட் ஜெரிங்), ஹீ இட் பூங் (ஜெலாப்பாங்) ஆகியோராவர்.

பக்காத்தான் பிரதிநிதியாக இருந்த 10 மாதங்களும் தாம் ஒதுக்கிவைக்கப்பட்டவர்போல் நடத்தப்பட்டதாக ஜமாலுடின் கூறினார்.

“ஓர் ஆட்சிக்குழு உறுப்பினர்போல் என்னை அவர்கள் நடத்தவில்லை. முக்கியமான விசயங்களில் முடிவெடுக்கும்போது என்னை ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

“என்னையோ, ஒஸ்மானையோ ஆலோசனை கேட்க மாட்டார்கள். எல்லாவற்றையும் ‘மூன்று என்கள்’தான் முடிவு செய்வார்கள்”.

‘மூன்று என்கள்’ யார் என்று கேட்டதும் ஜமாலுடினுக்குச் சிரிப்பு வந்து விட்டது. பதவி இழந்த ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ங்கே கூ காம், ங்கா கோர் மிங், பதவி இறக்கப்பட்ட மந்திரி புசார் நிஜார் ஜமாலுடின் ஆகியோரே அம்மூவருமாவர் என்று விடையளித்தார். 

உறவினர்களாக ங்கேயும் ங்காவும் பேராக் டிஏபி-யின் பெரும்புள்ளிகளாவர். அவர்கள் சொன்னபடியெல்லாம் பாஸ் கட்சியைச் சேர்ந்த நிஜார் ஆடுவார் என்று குறை சொல்லப்பட்டதுண்டு. 

பக்காத்தானில் ஒதுக்கி வைக்கப்பட்டாலும் அதைவிட்டு வெளியேற விரும்பியதில்லை என்றும் தாம் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டதாகவும் ஜமாலுடின் கூறினார்.

“பதவி விலகல் கடிதங்களைக் காண்பித்து எங்களை வெளியேறச் சொன்னவர்கள் யார்? அவர்களைக் கேளுங்கள்.”

மூவரின் பதவி விலகல் கடிதங்களைக் காண்பித்து அவர்களின் தொகுதிகள் காலியானதாக அறிவிக்க மாநில சட்டமன்றத் தலைவர் வி.சிவகுமார் மேற்கொண்ட முயற்சிகளைச் சுட்டிக்காண்பிக்கும் வகையில் ஜமாலுடின் அவ்வாறு  கூறினார்.

சிவகுமாரின் முயற்சி சட்டப்பூர்வமானதல்ல என்று கூட்டர்சு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

பேராக்கில் ஒரு திடீர் தேர்தல் நடத்தப்படலாம் என்ற வதந்திகள் உலவும் வேளையில், தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதா பாரிசான் நேசனல் வேட்பாளராக நிற்பதா என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை என்று ஜமாலுடின் கூறினார்.

“நேரம் வரும்போது அதைத் தெரிவிப்பேன்”, என்றாரவர்.

இப்போதைக்கு தம்மீது போடப்பட்டுள்ள ஊழல் வழக்கில் கவனம் செலுத்துவதாகவும் வார இறுதிகளில் தொகுதி மக்களுக்குச் சேவையாற்றுவதாகவும் அவர் சொன்னார்.

ஜமாலுடின், ஒஸ்மான் ஆகியோருடன் மேலும் சில பக்காத்தான் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் பூசாட் பண்டார் ஸ்ரீ இஸ்கண்டரின் மேம்பாட்டுத் திட்டமொன்றுக்கு விரைவான ஒப்புதல் வழங்கக் கையூட்டு பெற்றார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெறுகிறது.

 
You can leave a response, or trackback from your own site.

2 Responses to “பெஹ்ராங் பிரதிநிதி: குடும்பத்தில் ஒருவராக பிஎன் எங்களைக் கவனித்துக்கொள்கிறது”

  1. subramanian says:

    Halo jamal hang bukan orang yang dikehendaki oleh rakyat. kalau hang berani letakkan jawatan dahulu, cabarlah dengan pakatan sudah pasti hang akan kalah dan dihalau oleh rakyat Perak…

  2. Ho says:

    Thank GOD you left PR. You are supposed to be with corrupted BN. May GOD bless you.

Leave a Reply