நாட்டின் உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றம், பாரிசான் நேசனலின் ஜாம்ரி அப்துல் காதிர்தான் சரியான பேராக் மந்திரி புசார் என்று ஏகமனதாகத் தீர்ப்பளித்துள்ளது.
இன்று காலை 11 மணிக்கு அதன் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன் வழி பக்காத்தான் ராக்யாட்டின் முகமட் நிஜார் ஜமாலுதீன் சமர்பித்த விண்ணப்பத்தை அது நிராகரித்தது.
மந்திரி புசார் பதவிக்கு முகமட் நிஜார் நடத்திய போராட்டமும் இதனுடன் முடிவுக்கு வருகிறது. அந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கு முறையீடு செய்து கொள்ளப்பட மாட்டாது என்று அவருடைய வழக்குரைஞர் லியோங் சியோக் கெங் கூறினார்.
தாம் வருத்தமடைந்துள்ள போதிலும் அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக நிஜார் தெரிவித்தார். தமது ஆதரவாளர்கள் அமைதியாக இருப்பர் என்றும் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.
“மலேசியாவுக்கு இன்று மிகவும் சோகமான நாள் ஆகும். அரசியலமைப்பு சீரழிக்கப்பட்டுள்ளது”, என்று அவர் சொன்னார்.
அந்தத் தீர்ப்பு வெளியில் கசிந்ததும் நீதிமன்றத்துக்கு வெளியில் “Bubar DUN” (மாநிலச் சட்டமன்றத்தைக் கலையுங்கள்), “Zambry penakut”(ஜாம்ரி கோழை), “tipu”(மோசடி), “rasuah”(ஊழல்) என்று பக்காத்தான் ராக்யாட் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.
ஆனால் பாரிசான் நேசனல் ஆதரவாளர்கள் தங்களது தலைவர்கள் வெளியில் வந்தபோது மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
“நான் அந்தத் தீர்ப்புக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அனைவரும் அதனை ஏற்றுக் கொள்வர் என்று நான் நம்புகிறேன். இது பேராக் மக்களுக்குக் கிடைத்த வெற்றி”, என்று பேராக் மாநில ஆட்சிமன்றத்தின் மூத்த உறுப்பினர் ஹமீடா ஒஸ்மான் கூறினார்.
ஆனால் “5க்கு0 என்ற முடிவு நீதித்துறைக்கு அவமானத்தை தந்த நேரம்,” என்று டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் வருணித்தார். இது “நீதிக்கு கறுப்பு தினம்,” என்று அவர் தமது டிவிட்டர் இணையப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் ஒரே பேராக்கில் தோல்வி அடைந்தாலும் நாங்கள் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று கோப்பெங் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லீ பூன் சாய் கூறினார்.
ஐவர் கொண்ட நீதிபதிகள் குழுவுக்கு முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி அலாவுதீன் முகமட் ஷெரீப் தலைமை ஏற்றிருந்தார்.
மலாயாத் தலைமை நீதிபதி அரிபின் சாக்காரியா, கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளான சுல்கிப்லி அகமட் மக்கினுடின், முகமட் கசாலி முகமட் யூசோப், அப்துல் ஹமீட் எம்போங் ஆகியோர் மற்றவர்கள் ஆவர்.
நீதிபதி அரிபின் தீர்ப்பை வாசித்தார். மாநிலச் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் மந்திரி புசாரை சுல்தான் நீக்க முடியும் என்றும் அவர் சொன்னார். ஆகவே ஜாம்ரி சட்டமன்றத்தில் 31 இடங்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.
காலை 7 மணி தொடக்கம் புத்ரா ஜெயாவில் உள்ள நீதிமன்ற மாளிகையில் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. நீதிமன்றத்துக்குள் செல்வதற்கு மக்கள் அனுமதி பெற அவர்கள் வரிசையாக நின்றனர்.
