“தியோ கொலை செய்யப்பட்டார்”: எம்ஏசிசி சுவாரா கெஅடிலானுக்கு எதிராகப் புகார் 2 Jan | செய்தி.

எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் விசாரிக்கப்பட்ட சிலாங்கூர் மமநில ஆட்சிமன்ற உறுப்பினரின் அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹாக்கின் மரணம் கொலை என்று உறுதிப்படுத்தும் கட்டுரை மீது பிகேஆர் சஞ்சிகையான சுவாரா கெஅடிலானுக்கு எதிராகவும் தாய்லாந்தின் நோய்க் கூறு நிபுணர் டாக்டர் பொர்ன்திப் ரோஜானாசுனாந்த்துக்கும் எதிராகவும் போலீஸில் நேற்று புகார் செய்திருக்கிறது.

புத்ராஜெயா எம்ஏசிசி புலானய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளான 30 வயது ஹிஷாம் முகமட் யூசோப், 41 வயதான ரவூப் கனி ஆகியோர் ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் அந்த புகார்களைச் செய்தனர்.

அந்த சஞ்சிகையின் 2009ம் ஆண்டு டிசம்பர் 29 முதல் 2010ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி வரைக்குமான அண்மைய இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையை தாம் படித்ததாகவும் அந்தக் கட்டுரை சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினரின் அரசியல் உதவியாளரான தியோ கொலை செய்யப்பட்டார் என்ற முடிவுக்கு அது வந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்ததாகவும் ஹிஷாம் தமது புகாரில் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி சுங்கை பூலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சவப் பரிசோதனையின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 16ம் தேதி பிளாஸா மாஸாலாம் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இறந்து கிடக்க காணப்பட்ட தியோ கொலை செய்யப்பட்டதாக அந்தக் கட்டுரை உறுதிப்படுத்துகிறது என்றும் அவர் தமது புகாரில் கூறியிருக்கிறார்.

“எம்ஏசிசி அதிகாரி என்ற முறையில், சுவாரா கெஅடிலானில் வெளிவந்த கட்டுரையின் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துமாறு நான் போலீசாரைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் வெளியிடப்படுள்ள விஷயம், இப்போது நடந்து கொண்டிருக்கும் மரண விசாரணைக்கு (தியோவின் மரணம்) முரணானது என்றும் நீதி விசாரணைக்கு முரணானது என்றும் நான் கருதுகிறேன்.”

“அத்துடன் தியோ விஷயத்தை யாரும் விவாதிக்கக் கூடாது என்ற சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் விதித்துள்ள தடையை நினைவுபடுத்தும் வகையிலும் அது அமையும்,” என்றார் அவர்.

டாக்டர் பொர்ன்திப் தகவலை “கசிந்திருக்கலாம்”

டாக்டர் பொர்ன்திப், தடயவியல் அறிக்கையை அங்கீகாரம் இல்லாத நபர்களிடம் வழங்கியிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதால் தாம் அவருக்கு எதிராக புகார் செய்வதாக இன்னொரு போலீஸ் புகாரில் ரவூப் குறிப்பிட்டுள்ளார்.

“டாக்டர் பொர்ன்திப்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் நீதிமன்ற முடிவுக்கு எதிராக இருப்பதாலும் எம்ஏசிசியின் தோற்றத்தை மேலும் கீழறுப்புச் செய்யும் என்பதாலும் அந்தப் புகார் செய்யப்பட்டுகிறது”, என்று அவர் தமது புகாரில் கூறியிருக்கிறார்.

இதனிடையே விடுமுறைக்கு பின்னர் தமது பணியைத் தொடங்கியுள்ள எம்ஏசிசி தலைமை ஆணையாளர் டத்தோ அபு காசிம் முகமட், அந்த கட்டுரை மீதும் போலீஸ் புகார்கள் மீதும் அறிக்கை வழங்குமாறு தமது அதிகாரிகளைத் தாம் கேட்டுக் கொள்ளப் போவதாக தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

“அவர்கள் போலீஸ் புகார்களைச் செய்திருந்தால் போலீசார் விசாரணைகளை நடத்தட்டும்,” என்றார் அவர்.

போலீஸ் நிருபரை விசாரிக்கும்

இரண்டு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருப்பதை சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த விவகாரத்தை வகைப்படுத்துவதற்கு முன்னர் அந்த கட்டுரையை எழுதிய சுவாரா கெஅடிலான் நிருபரை அழைக்கப் போவதாகவும் அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிமன்ற உறுப்பினர் இயான் யோங் ஹியான் வாவின் அரசியல் உதவியாளரான 30 வயது தியோ கடந்த ஆண்டு ஜுலை மாதம் 16ம் தேதி பிளாஸா மாஸாலாம் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அதற்கு முன்னதாக அவர் அதே கட்டிடத்தில் 14 வது மாடியில் உள்ள எம்ஏசிசி அலுவலகத்தில் மாநில சட்டமன்ற உறுப்பினருக்கான ஒதுக்கீடுகள் தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது மீது சாட்சியாக வாக்குமூலம் அளித்தார்.

அதற்கு நான்கு நாட்களுக்குப் பின்னர் சிலாங்கூர் செமினியில் உள்ள நிர்வாணா நினைவுப் பூங்காவில் தியோ அடக்கம் செய்யப்பட்டார். ஆனால் நவம்பர் 22ம் தேதி இரண்டாவது சவப் பரிசோதனை நடத்தப்படுவதற்கு குரோனர் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அவரது சடலம் மீண்டும் எடுக்கப்பட்டது.

சுங்கை பூலோ மருத்துவமனையின் நோய்க்கூறு பிரிவின் தலைவர் டாக்டர் ஷாஹிடான் முகமட் நூர் இரண்டாவது சவப் பரிசோதனையை மேற்கொண்டார். அப்போது சிலாங்கூர் அரசாங்கத்தைப் பிரதிநிதித்து டாக்டர் பொர்ன்திப்பும்  பிரிட்டனைச் சேர்ந்த தனிப்பட்ட தடயவியல் நிபுணரான பேராசிரியர் டாக்டர் பீட்டர் வானெஜிஸ் எம்ஏசிசி யைப் பிரதிநிதித்துப் பார்வையாளர்களாக உடன் இருந்தனர்.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply