அரசாங்கம் எவ்வாறு 100 பில்லியன் அமெரிக்க டாலர் வரை “சூறையாடியது” 28 Nov | செய்தி.

பல பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட போர்ட் கிள்ளான் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஊழல் இப்போது பெரிதாக இருக்கலாம். ஆனால் 1980 ம் ஆண்டுகளின் தொடக்கத்திலிருந்து நிகழ்ந்து வரும் பல ஊழல்களில் அது அண்மைய மோசடியாகும்.

“1980 ம் ஆண்டுகளின் தொடக்கத்திலிருந்து ஊழலில் ஏறத்தாழ 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் “நாடு இழந்திருக்கக் கூடும் என்று சிங்கப்பூர் மோர்கன் ஸ்டான்லியைச் சேர்ந்த தென்கிழக்காசிய பொருளதார நிபுணர் டேனியல் லியானை மேற்கோள் காட்டி டைம் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஊழல்கள் நாட்டின் கருவூலத்தை சூறையாடிய ஊழல்களுக்கு சிறிய எடுத்துக்காட்டுதான்:

1983 ம் ஆண்டு உலக வரலாற்றில் அப்போது மிகவும் கடுமையான பொருளக ஊழல் ஹாங்காங்கில் வெடித்தது.

அங்கு இயங்கிய பாங்க் பூமிபுத்ரா மலேசியா பெர்ஹாட்டின் ஒரு பிரிவான பூமிபுத்ரா மலேசியா பைனான்ஸ் (பிஎம்எப்) கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் இழப்பை சந்தித்தது.

அந்தப் பணம் பல பிரபலமான மனிதர்களால் உறிஞ்சப்பட்டு தனியார் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்பட்டிருந்தது.

அந்த ஊழல் விவகாரத்தில் கொலை, தற்கொலை ஆகியவை நிகழ்ந்ததுடன்  மலேசிய அரசின் மிக உயர்நிலை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருந்தனர். மலேசிய அரசாங்கம் இறுதியில் தலையிட்டு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் பணத்தை கொடுத்து அந்த நிறுவனத்தைக் காப்பாற்றியது.

பணம் காணாமல் போன அந்த ஊழல் குறித்த விவகாரத்தை விசாரிக்க ஹாங்காங்கிற்கு அனுப்பப்பட்ட பாங்க் பூமி துணை நிர்வாகியான ஜலீல் இப்ராஹிம் கொலையில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட மாக் பூன் தானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

நிதிகளில் பெரும்பகுதியை சூறையாடுவதில் சம்பந்தப்பட்ட ஜார்ஜ் தான், அவருடைய கேரியன் குழுமம் நொடித்துப் போன பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் மேலும் பலரும் குற்றம் சாட்டப்பட்டனர்.

அந்த ஊழலை கட்டுப்படுத்துவதற்கு பணத்தை எறிவதற்கான வேண்டுகோளுக்கு அப்போதையப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அனுமதி அளித்த அமைச்சரவைக் குறிப்புக்களை மேற்கோள் காட்டிய சுயேச்சை ஆணைக் குழுவின் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட போதிலும் முக்கியமான அரசியல்வாதி யாரும் மலேசியாவில் தண்டிக்கப்படவில்லை.

பாங்க் பூமி சம்பந்தப்பட்ட முதலாவது ஊழல் அது தான். அரசாங்கத்துக்குச் சொந்தமான அந்த வங்கி ஏற்கனவே இரண்டு முறை இன்றைய டாலர் மதிப்பில் 600 மில்லியன் டாலர் செலுத்தப்பட்டுக் காப்பாற்றப்பட்டது.

இறுதியில் அந்த வங்கியை அரசாங்க அதிகாரிகள் சிஐஎம்பி குழுமத்திடம் ஒப்படைத்து விட்டனர். அந்தக் குழுமத்திற்கு பிரதமரின் சகோதரர் நாசிர் ரசாக் தலைமை ஏற்றுள்ளார்.

பாங்க் நெகாரா 20 பில்லியன் ரிங்கிட்டை இழந்தது

அந்த ஊழல் அடுத்த 24 ஆண்டுகளுக்கு மலேசிய உயர் அதிகாரிகள் தொடர்புடைய பல மோசடிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது. மலேசியாவில் நீங்கள் கொலையும் செய்து விட்டு தப்பித்து விடுவதோடு கருவூலத்தைச் சூறையாடியதையும் வைத்துக் கொள்ளலாம் என்பதை அவை மெய்பித்தன.

எடுத்துக் காட்டுக்கு பெர்வாஜா ஸ்டீல் 800 மில்லியன் டாலருக்கு மேல் இழந்தது. அதன் தலைவரும் மகாதீரின் சேவகர்களில் ஒருவருமான எரிக் சியா மீது அந்த நிறுவனத்தை சூறையாடியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அவர் விசாரிக்கப்பட்டார். ஆனால் எதிர்வாதம் புரிவதற்கு அழைக்கப்படாமலேயே அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்திய சிறு வணிகர்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட சிசிபி என்ற கோப்பரடிவ் சென்ட்ரல் வங்கி, அது அம்னோ மற்றும் மஇகா அரசியல்வாதிகளுக்கு கொடுத்த நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் பெறும் கடன்களைத் திரும்பப் பெற முடியாமல் போனதால் நாட்டின் மத்தியப் பொருளகமான பாங்க் நெகாரா தலையிட்டு அதனைக் காப்பாற்ற வேண்டியிருந்தது.

அந்தக் கடன்களில் சிலவற்றுக்கு வட்டி கூட செலுத்தப்பட்டது கிடையாது. நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுக்கள் அந்த வங்கியின் தலைமை நிர்வாகி மீது சுமத்தப்பட்டாலும் அரசியல்வாதிகள் யாரும் குற்றம் சாட்டப்படவில்லை.

அதற்கு முன்னதாக மாமிங்கோ என்னும் நிறுவனத்தின் வழியாக லண்டன் ஈயச் சந்தையில் தலையிடுவதற்கு மகாதீர் வற்புறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் மலேசிய அரசாங்கம் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் இழந்ததாக மதிப்பிடப்படுகிறது.

அந்த முயற்சியின் போது ஈய விலை டன் ஒன்றுக் 4.50 டாலரிலிருந்து 7.50 டாலருக்கு உயர்ந்தது.

அந்த இழப்பை மறைப்பதற்காக முகாவாசா என்னும் 2 அமெரிக்க டாலர் நிறுவனம் அமைக்கப்பட்டு, அது வெளியிட்ட பங்குகளை கொள்முதல் செய்வதற்கு ஊழல் சேம நிதி வாரியத்தின் பணம் திருப்பி விடப்பட்டது.

அப்போதைய பாங்க் நெகாரா கவர்னர் அந்நியச் செலாவணிச் சந்தையில் தீவிரமாக ஊக வாணிகத்தில் ஈடுபடுவதற்கு மகாதீர் பின்னணியில் இருந்ததாக நம்பப்படுகிறது. அந்த வாணிகத்தில் 20 பில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. அந்த இழப்பைத் தொடர்ந்து பதவி விலகுமாறு அதன் கவர்னர் ஜப்பார் ஹுசேனும் அந்நியச் செலாவணி வாணிகப் பிரிவுத் தலைவர் நோர் முகமட் யாக்கோப்பும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

“மலேசியாவின் என்ரோன் ஊழல்”

அதற்குப் பின்னர் பல அரசியல் நிதி ஊழல்கள் நிகழ்ந்தன. 2005 ம் ஆண்டு நாட்டின் முக்கிய இஸ்லாமிய வங்கியான பாங்க் இஸ்லாம் மலேசியா, 2005 ம் ஆண்டு 457 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்தது. அதில் பெரும் பகுதி அதனுடைய லாபுவான் கிளை செய்த மொத்தம் 774 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள முதலீடுகள் மற்றும் மோசமான கடன்கள் சம்பந்தப்பட்டவை ஆகும்.

காலப் போக்கில் அதன் வராத கடன்களின் மொத்த மதிப்பு 2.2 பில்லியன் ரிங்கிட்டை எட்டியது. அதற்கு தவறான நிர்வாகமும் போதுமான உள் கட்டுப்பாடுகளும் இல்லாமையும் காரணங்களாகும். அத்துடன் “மலேசிய அரசாங்கத்திற்கு விருப்பமான குழந்தை என்பதால் அதன் நடவடிக்கைகளை யாரும் தொட முடியாது என்ற தவறான எண்ணமும் காரணம்”, என்று அராப் நியூஸ் என்னும் சஞ்சிகை கூறியது.

2007 ம் ஆண்டு மலேசியாவின் என்ரோன் ஊழல் என்று பேசப்பட்ட டிரான்ஸ்மில் குரூப் சென் பெர்ஹாட் விவகாரம் ஆகும். அதன் தலைவர் முன்னாள் மசீச தலைவரும் போக்குவரத்து அமைச்சருமான லிங் லியாங் சிக் ஆவார். அந்த நிறுவனம் தனது வருமானத்தை 530 மில்லியன் ரிங்கிட் கூடுதலாகக் காட்டியிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது..

அது 2006 ம் ஆண்டுக்கு அறிவித்த 207 மில்லியன் ரிங்கிட் வரிக்கு முந்திய ஆதாயம் உண்மையில் 126 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஆகும். 2005 ம் ஆண்டுக்கு அது அறிவித்த 120 மில்லியன் ரிங்கிட் வரிக்கு முந்திய இழப்பு உண்மையில் 77 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஆகும்.

அந்த ஊழலின் விளைவாக அந்த நிறுவனத்தில் 13.5 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் அரசாங்கத்திற்கு சொந்தமான போஸ் மலேசியா அண்ட் சர்வீசஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட், 2006 நிதி ஆண்டில் தனது வருமானம் பாதிக்கப்படலாம் என்று எச்சரித்தது.

இன்னும் அதிகமான மீட்பு நடவடிக்கைகள்

2001 க்கும் 2006 க்கும் இடையில் தனியார்மயமாக்கப்பட்ட ஏழு திட்டங்களைக் காப்பாற்றுவதற்கு அரசாங்கம் பல பில்லியன்களைச் செலவு செய்ய வேண்டியிருந்தது.

அவற்றுள் கோலாலம்பூரின் இரண்டு பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள், மோசமான நிலையில் இருந்த மலேசிய விமான நிறுவனம், கழிவு நீர் நிர்வாக நிறுவனம் ஆகிய பல திட்டங்களும் அடங்கும்.

அவற்றை காப்பாற்றுவதற்கு கூறப்பட்ட வாசகம் மிகவும் சுருக்கமானது. ” அவை முதிர்ச்சி அடையாத நிலையில் தனியார் மயமாக்கப்பட்டு விட்டன.”

பெரும்பாலும் அம்னோவுடன் அணுக்கமான தொடர்புடைய பல நெடுஞ்சாலை கட்டுமான நிறுவனங்களும் 38.5 பில்லியன் ரிங்கிட் செலவில் காப்பாற்றப்பட்டன.

தீர்வையற்ற கார் வாணிகத்திற்கான ஏபி என்ற அங்கீகரிக்கப்பட்ட அனுமதிகளை 18 ஆண்டுகளுக்கு மேல் அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சராகப் பணி புரிந்த ரபீடா அஜீசா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வந்ததாக தகவல் வெளியிடப்பட்டது.

அந்த அனுமதிகள் கொடுக்கப்பட்ட இரண்டு நிறுவனங்களுக்குக் காட்சிக் கூடங்கள் கூடக் கிடையாது. அதில் ஒன்று ரபீடா கணவரின் உறவினருக்கு சொந்தமானதாகும். அவருக்கு பல அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.

அம்னோவில் ரபீடா மீது கடுமையாகக் குறை கூறப்பட்ட போதிலும் அவர் கட்சித் தேர்தல்களில் தோற்கடிக்கப்படும் வரையில் அமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தார்.

1960 ம் ஆண்டுகளில் டீம்ஸ்டர் ஓய்வூதிய நிதியிலிருந்து மில்லியன் கணக்கான டாலரை சூறையாடியதற்காக தொழிற்சங்கத் தலைவர் ஜிம்மி ஹோபாவையும் அவரது நண்பர்களையும் சிறையில் அடைப்பதற்கு அரசாங்கம் எவ்வளவோ முயற்சி செய்தது, அது அந்த தொழிற்சங்கத்தின் நிர்வாகம் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அது அரசாங்க வழக்குரைஞர்களை பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது.

அதற்கு என்ன காரணம். ஹோபாவும் அவரது நண்பர்களும் எவ்வளவு பணத்தைத்தான் திருடினாலும் அந்த நிதியில் பெரும் பணம் மிச்சம் இருந்தது தான்.

அவ்வளவு பணக்கார நிதியாக அந்த ஓய்வூதிய நிதி இருந்தது. மலேசியாவிலும் அதே நிலைதான் இருப்பதாகத் தோன்றுகிறது.

 
You can leave a response, or trackback from your own site.

2 Responses to “அரசாங்கம் எவ்வாறு 100 பில்லியன் அமெரிக்க டாலர் வரை “சூறையாடியது””

  1. malaysia tamilan says:

    Orang-orang yang makan duit rakyat masih boleh jadi VIP negara ini..!! Lagi-lagi bagi komen pada hal orang dan berjalan bebas..tak malu petui..!! Kami rakyat malaysia nak mengadu pada siapa..tak boleh kerana disini ada buaya-buaya besar bukan makan manusia..hanya makan duit rakyat..oh..tuhan ku..tolong kami..tolong negara ini..!!

  2. alex says:

    umno are suck

Leave a Reply