மலேசியாவில் இரு-கட்சி அரசியல்முறை அமைய இரண்டு விசயங்கள் தடங்கல் செய்வதாக அரசமைப்பு சட்ட வல்லுநர் அப்துல் அசிஸ் பாரி கருதுகிறார்.
அரசமைப்பு, இரு-கட்சி அரசியலுக்கு ஆதரவாகத்தான் உள்ளது. ஆனால் அதற்கான சூழல்தான் இல்லை என்று அரசியல் ஆய்வாளருமான அசிஸ் கூறினார்.
“மக்களின் கருத்துகளையும் பழக்கங்களையும் ஒரே நாளில் மாற்றி விட முடியாது. சிலாங்கூரில் (பாஸ் மாநில ஆணையர்) ஹசன் அலியின் குறும்புத்தனங்களையும் அதைப் பலர் பொறுத்துக்கொண்டிருந்ததையும் பார்க்கும்போது ஓர் ஏற்புடைய சூழல் இன்னும் உருவாகவில்லை என்றுதான் தோன்றுகிறது.”
இரண்டாவது தடங்கல் என்னவென்றால், பக்காத்தான் ரக்யாட்டில் இரு-கட்சி அரசு பற்றி சரிவர புரிந்துகொள்ளப்படாமலிருப்பது.
உதாரணத்துக்கு, பாஸ் தலைவர்கள், திரெங்கானு துணை ஆணையர் அபு பக்கார் சிக் போன்றோர் இரு-கட்சி அரசியல், கட்சியின் உள் நடைமுறைகளைப் புறக்கணிக்கும் என்று கூறி அதற்கு எதிர்ப்புக் காட்டினார்கள்.
அவர்கள் இரு-கட்சி அரசியலில் அவ்வளவாக ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் தெரியவில்லை. பக்காத்தான் தலைவராக கிளந்தான் மந்திரி புசார் நிக் அசிஸைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற பக்காத்தான் ஒருங்கிணைப்பாளர் ஜயிட் இப்ராகிம் பரிந்துரைத்தபோது பக்காத்தான் தலைவர்கள் பலர் அதை ஏற்காமலிருந்த நிலை அதைத்தான் காட்டுகிறது.
“இது வருந்ததக்கது. ஏனென்றால், இரு-கட்சி அரசியல் முறைக்கு ஏற்ற தருணம் இதுதான். நாம் முன்னோக்கிச் செல்ல இரு-கட்சி அரசியல் முகவும் அவசியமானது”, என்று அசிஸ் கூறினார்.
பக்காத்தானில் சில தலைவர்கள் அதற்காக உண்மையிலேயே பாடுபடுகிறார்கள். அன்வார் இப்ராகிம், பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட், ஜயிட் போன்றோர் அதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள்.
1990-களில் தெங்கு ரசாலி ஹம்சா தலைமையில் செயல்பட முனைந்த ககாசான் ரக்யாட்/அங்காத்தான் பெர்பாடுவான் உம்மா போன்றோ 1999-இல், அமைந்த பாரிசான் ஆல்டர்நேடிவ் போன்றோ அல்லாமல் பக்காத்தான் ஒரு வலுவான அடித்தளத்தில் அமைந்துள்ளது என்றாரவர்.
மேலும், நடப்பு அரசில் காணப்படும் திறமைக்குறைவும் ஊழலும் அரசியல் ஆதரவை பக்காத்தான் பக்கம் திருப்ப உதவியாக இருக்கும்.
இரு-கட்சி அரசியலால் நாட்டின் பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று சொல்ல முடியாது. ஆனால் அது, முன்னிலும் பொறுப்பான நிர்வாகம் அமைய வழிகோலும்.
“இரு தரப்புக்கும் சம வாய்ப்புகள் கொண்ட ஆடுகளத்தில்தான் போட்டியிட வேண்டும் என்கிறபோது அங்கு எத்தரப்பும் மெத்தனமாக இருக்க முடியாது”, என்று அப்துல் அசிஸ் மேலும் கூறினார்.
