பங்காரம்மாவை அவரது தந்தைதான் மதம் மாறச் செய்தார் 23 Nov | செய்தி.

குடும்ப மாது எஸ் பங்காரம்மாவை அவரது தந்தைதான் இசுலாத்துக்கு மதம் மாற்றினாரென்றும், குற்றம்சாட்டப்பட்டபடி மாநில சமயத்துறை அதிகாரிகள் அல்லவென்றும், சமூக நலன் துறை தலைமை இயக்குநர் மெமே சைனல் ரஷிட் இன்று கூறியுள்ளார்.

பினாங்கு கெப்பாளா பத்தாஸ் தாமான் பக்தி  சமூக நலன்சேவை இல்லத்தில் தான் தங்கியிருந்தபோது, ஏழு வயது அறியாப் பருவத்தில் தான் மதம் மாற்றப்பட்டதாக இரண்டு குழந்தைகளுக்குத் தாயான   அந்த மாது தெரிவித்திருந்தார்.

அது குறித்த செய்தி, ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, பினாங்கு சமூக நலன் சேவைத் துறை அவ்விவகாரம் குறித்த புலனாய்வுகளை மேற்கொண்டதாக ஓர் அறிக்கையில் மெமே கூறினார்.

கோப்புகளில் உள்ள தகவல்களின்படி, 1983ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதியன்று, பங்காரம்மாவையும் அவருடன் பிறந்த மற்றவர்களையும்  அவர்களது தந்தையே மதம் மாற்றியதாக கூறப்பட்டுள்ளது.

அந்த மத மாற்றத்தை, அவர்களது பெற்றோர்கள் அங்கீகரிக்கும் கடிதம், பஹாங் ரொம்பினில் உள்ள இசுலாமிய சமய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு மார்ச் மாதவாக்கில்தான் அந்த பெண், சமூக நலன் சேவை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். கெடா, சுங்கை பட்டாணியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த போது, பாதுகாப்புக்காக அவர் அந்த இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டாரென மேமே, மேலும் கூறினார்.

“ஆக, சமுக நலன் இல்லத்தின் பராமரிப்பின்போது அவர் இசுலாத்துக்கு மதம் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யென மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.”

2000ஆம் ஆண்டு தனது திருமணத்தை பதிவு செய்து கொண்டபோது, தனது முஸ்லீம் தகுதி குறித்து தெரிய வந்ததாக பங்காரம்மா, முஸ்லீம் பெயர், சித்தி ஹஸ்னா வங்காரம்மா அப்துல்லா கூறினார்.

அவரது சமயத் தகுதி சம்பந்தப்பட்ட வரை, அது குறித்து முடிவு செய்வது பினாங்கு இசுலாமிய சமய விவகார அதிகாரிகளைப் பொறுத்துள்ளதென்றார் அவர்.

இதனிடையே இந்த விவகாரத்தை தாங்கள் பரிசீலித்து வருவதாக பினாங்கு இசுலாமிய மன்றத்தின் தலைவர் ஷாபுடின் யாஹாயா உறுதிப்படுத்தியுள்ளார்.

“எங்களைப் பொறுத்தவரை, இசுலாத்தை கடைப்பிடிக்கிறாரோ இல்லையோ, அவர் ஒரு முஸ்லீம். இசுலாமிய சமயம் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் ஷகடாவை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதுதான் முக்கியம்.”

“ஆனால் சுய விருப்பத்தின்பேரில், இசுலாமியச் சமயத்தை ஹஸ்னா (பங்காரம்மா) கைவிடலாம். என்றபோதிலும் குறிப்பிட்ட சில விதிமுறைகளை அவர் பின்பற்ற வேண்டும்.

பங்காரம்மா வழக்கு, முஸ்லீமாக மதம் மாறிய சித்தி ஃபாத்திமா டான் அப்துல்லா, இவ்வாண்டு முற்பகுதியில், இசுலாத்தை கைவிட்டு, மீண்டும் பௌத்த மதத்துக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்ட விவகாரத்தைப் போன்றதாகும் என்றாரவர்.

பங்காரம்மாவின் திருமணத் தகுதி சம்பந்தப்பட்டவரை, அதனை ஷரியா நீதிமன்றம்தான் முடிவு செய்யும். காரணம் சட்டப்படி பங்காரம்மா ஒரு முஸ்லீம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply