டிஏபி அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹாக் உடல் மீதான இரண்டாவது சவப் பரிசோதனை இன்று பிற்பகல் மணி 3.30 க்கு முடிவடைந்தது.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு சவப் பரிசோதனை நீடித்தது. தியோவின் பெற்றோர்களையும் உடன்பிறப்புக்களையும் நிருபர்கள் சந்தித்த போது அவர்கள் மனத் திருப்தி அடைந்திருப்பது போல் தோன்றியது.
தடயவியல் துறைக்கு அருகில் செல்வதற்குக் கூட நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை. சவப் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தது என்று மட்டும் அவரது சகோதரி லீ லான் கூறினார். தாய்லாந்து நோய்க் கூறு நிபுணர் டாக்டர் பொர்ன்திப் ரோஜானாசுனாந் தியோ குடும்பத்தினருக்கு விளக்கம் அளித்தார்.
தவறு நடந்துள்ளதற்கான சத்தியத்தைக் காட்டும் புதிய ஆதாரங்கள் எதுவும் கிடைத்ததா என்ற வினாக்களுக்கு அவர் விவரம் தர மறுத்து விட்டார்.
“டிசம்பர் 9 ம் தேதி விசாரணை மீண்டும் தொடங்கும் வரை காத்திருங்கள்”, என்று அவர் தெரிவித்தார். சவப்பரிசோதனை அறிக்கை எப்போது வெளியிடப்படும் என்பதும் அவருக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.
மருத்துவ சொற்கள் கலந்திருப்பதால் பொர்ன்திப் விளக்கமளித்த சில அம்சங்களை குடும்பத்தினர் புரிந்து கொள்ள முடியவில்லை என்று தியோவின் சகோதரர் பெங் கீ கூறினார்
தாய்லாந்து நிபுணர் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய போது நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். ஆனால் அவர் கருத்து ஏதும் கூற மறுத்து விட்டார்.
சிலாங்கூர் அரசாங்கத்தின் சார்பில் அவர் இரண்டாவது சவப்பரிசோதனையின் போது பார்வையிட்டார்.
இதற்கிடையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பிரபலமான பிரிட்டிஷ் நோய்க் கூறு நிபுணர் பீட்டர் வெனெஜிஸை அமர்த்தியுள்ளது. அவர் இளவரசி டயானா மரண விசாரணையில் பங்கு கொண்டவர் ஆவார்.
சவப்பரிசோதனையை உள்நாட்டு நோய்க் கூறு நிபுணர் டாக்டர் ஷாஹிடான் முகமட் நூர் மேற்கொண்டார். மரண விசாரணையில் தியோ தற்கொலை காரணமாக மரணமடைந்தார் என்று சாட்சியமளித்த டாக்டர் கைருல் அஸ்னாம், டாக்டர் பிரசாந்த் சம்பேர்கர் ஆகியோரும் உடனிருந்தனர்.
கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையைச் சேர்ந்த நோய்க் கூறு நிபுணரான கே சரவணன் சவப்பரிசோதனை நடைமுறைகளை படங்களாக எடுக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார்.
தியோவின் உடல் நேற்று செமினியில் உள்ள ஒரு கல்லறையில் எடுக்கப்பட்டது. அதனை நாளை அடக்கம் செய்வதற்குக் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக தியோவின் சகோதரி கூறினார்.
