எம்எசிசி: லிங்கம் வழக்கு மறுபரிசீலனை செய்யப்படலாம் 12 Nov | செய்தி.

வி கே லிங்கம் வழக்கு “மூடப்பட்டுள்ளது” குறித்த குறைகூறல்கள் அதிகரித்து வரும் வேளையில், அந்த விவகாரத்தை மீண்டும் பரிசீலிப்பதற்கு   மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்  நடைமுறை மறுபரிசீலனைக் குழு ((PPO)  முன் வந்துள்ளது.

இதனை மேற்கொள்வதற்காக அனுமதி கோரும் கடிதத்தை சட்டத்துறை தலைவர் அலுவலகத்துக்கு பிபிஒ அனுப்புமென அதன் பேச்சாளர் இன்று   தெரிவித்தார்.

இன்று காலை நடைபெற்ற அந்த குழுவின் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டது.

அக்குழுவில் அதன் தலைவர், முன்னாள் தலைமைக் கணக்கு தணிக்கையாளர் ஹடினான் அப்துல் ஜாலில், சிசில் ஆப்ரகம், நிக் மொகமட் ஹசுடீன்    யூசோப், வால்டர் சந்தோசம், அமினா பிட் அப்துல் ராமான், மொகமட் ஹம்சா மொகட் காசிம், சைட் நோ சைய்ட் அஹமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பொது அக்கறை அடிப்படையில் அந்த வழக்கு மறுபரிசீலனை செய்யப்படுவதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் அக்குழுவின்   பரிந்துரைகள்,  2008ஆம் ஆண்டு எம்எசிசி சட்டத்தின் கீழ்  குறிப்பிடப்பட்டபடி, எம்எசிசியை கட்டுப்படுத்துகின்றது.

லிங்கம் வழக்கில், “மேல் நடவடிக்கை” எதுவும் எடுக்கப்படாது என சட்டத்துறை அமைச்சர் மொகமட் நஸ்ரி அப்துல் அசிஸ் அறிவித்தபோது அரசாங்கம்   குறை கூறலுக்கு இலக்கானது.

மேலும் லிங்கத்தின் செயல், தார்மீக ரீதியில் குற்றமாக கருதப்பட்டாலும், அவர் எந்த சட்டத்தையும் மீறவில்லை என்று நஸ்ரி வாதிட்டபோது, மேலும் பல  கொந்தளிப்பான ஆட்சேபங்கள் கிளம்பின.

அரச ஆணையம் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

சர்ச்சைக்குரிய வீடியோ படம் தொடர்பாக முன்னணி வழக்குரைஞரான லிங்கம் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்படமாட்டாரென விடுக்கப்பட்ட அறிவிப்பு குறித்து,   முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரும் கூட ஏமாற்றம் தெரிவித்தார். நீதிபதிகளின் நியமன பேரத்தில், தமது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்குவதற்கு சாட்சியமளிக்க தாம் தயாராக இருப்பதாகவும் அவர்  கூறினார்.

2007ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அந்த வீடியோவை அம்பலப்படுத்தினார். அந்த ஊழல் செய்தி, அனைத்துலக பத்திரிகைகளிலும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தேச நிந்தனைச் சட்டம், அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ், மகாதிர், இரண்டு முன்னாள் தலைமை நீதிபதிகளான அகமது ஃபைருஸ் ஷேக் அப்துல் ஹலிம், யூசோப் சின்,  முன்னாள் சுற்றுலா அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், கோடிஸ்வர வணிகர் வின்செண்ட் டான் போன்ற முன்னணி புள்ளிகள் விசாரிக்கப்பட வேண்டுமென அந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply