உலு மூடா வனப்பாதுகாப்புப் பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு பாஸ் தீர்மானிக்குமானால், அடுத்த தேர்தலில் அது கெடாவை இழந்து விடும் என்கிறார் கெராக்கான் உதவித் தலைவர் டாக்டர் எஸ். விஜயரத்னம்.
அந்த வனப்பகுதியில் மரம் வெட்டும் கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக்கின் திட்டத்தை “அபத்தமானது” என்று அவர் ஓர் அறிக்கையில் வருணித்திருந்தார்.
” அங்கு அவர் ஒரு மில்லியன் மரங்களை வெட்டுவாரானால், அது பாரிசான் நேசனலுக்குத்தான் நல்லதாக அமையும். அத்திட்டத்தினால் தண்ணீர் வறண்டு மக்கள் துன்பப்படுவார்களானால், அவர்களுக்குத் தெரியும் அடுத்து யாருக்கு வாக்களிப்பது என்று.”
கெடாவின் உலு மூடா பகுதி, வடக்கேயுள்ள மூன்று மாநிலங்களுக்கு நீர் விநியோகம் செய்யும் நீர்பிடிப்புப் பகுதியாகும்.
அங்கு வெட்டுமர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், ஐந்து மில்லியன் மக்களுக்கு கிடைக்கும் நீர் விநியோகம் அற்றுப் போகும் என சூழியல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
அங்கு வெட்டுமர நடவடிக்கை மேற்கொள்ளாதிருக்க கூட்டரசு அரசாங்கம் ரிம 100 மில்லியன் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறதென்று கடந்த வாரம் மந்திரி புசார் அசிசான் கூறினார்.
ஆனால் அங்கு மரங்களை வெட்டினால் அதன் மூலம் ரிம 16 பில்லியன் வருமானம் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டார். எனவே சுற்றுப்புறம் பற்றி அதிகம் கவலை கொள்ள வேண்டாம் என்றும் அவர் அத்திட்டத்தைக் குறைகூறுவோரைக் கேட்டுக்கொண்டார்.
“இறைவனின் கொடை”யாகிய வெட்டுமரத்தை வைத்து பணம் பண்ணப்போவதாக அசிசான் கூறியது பல சூழியலாளர்களை சினம் கொள்ள வைத்துள்ளது.
அவரது முடிவால் பினாங்குக்குக் கிடைக்கும் நீர் விநியோகம் வற்றிப் போகும் என அம்மாநில முதல் அமைச்சர் லிம் குவான் எங் கவலை தெரிவித்துள்ளார்.
அசிசானின் இம்முடிவுக்கு சுமார் 63 ஆயிரம் விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பினாங்கில் செயல்பட்டு வரும் சகாபாட் ஆலாம் மலேசியா, மலேசியா இயற்கை பாதுகாப்புக் கழகத்தின் கெடா கிளை ஆகியவையும் அதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளன.
இவ்விசயத்தில் டாக்டர் கோ சு கூனும் பினாங்கு அரசுக்கு ஆதரவாக இருக்கிறார்.
2003-லும் 2004-லும் அப்போதைய கெடா அரசு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மரம் வெட்ட முனைந்தபோது தாம் அதை எதிர்த்ததாக அவர் கூறினார்.
“நீர்ப்பிடிப்புப் பகுதியை அப்படியே வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்பதை நான் வலியுறுத்தினேன். பினாங்குக்கும் கெடாவுக்கும் இப்போதைய தலைமுறைக்கு மட்டுமல்லாமல் இனி வரப்போக்கும் தலைமுறைக்கும் நீர்ப்பிடிப்புப் பகுதி இன்றியமையாதது என்பதை வலியுறுத்தினேன்.”
” பினாங்கின் இப்போதைய முதல் அமைச்சரான லிம், கெடா மந்திரி புசாரிடம் நம்பத்தக்க வகையில் விசயத்தை எடுத்துரைக்க வேண்டும்”, என்று கூறிய கோ, பக்காத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் உதவியை நாடலாமே என்றும் கிண்டலாக கூறினார்.
ஆனால் அவரின் சகாவான டாக்டர் விஜயரத்னம் இப்படி நயமாகவெல்லாம் கூறவில்லை. அவர் நேரடியாக தாக்கிப் பேசினார். பக்காத்தான் தலைவர்களிடம் நிலவும் கருத்துவேறுபாடுகளை அவர் சுட்டிக்காட்டினார்.
” இவ்விசயத்தில் லிம், நாற்காலியில் சங்கடத்துடன் நெளிவதைக் காண வேடிக்கையாக உள்ளது. கெடாவில் மரங்களை வெட்டுவதால் பினாங்கின் நீர் விநியோகம் பாதிப்புறும். அத்துடன் அந்நடவடிக்கை, அவரது பக்காத்தான் சகா பின்விளைவுகளைப் பொருட்படுத்தாமல் நடந்து கொள்வதையும் காட்டுகிறது”, என்றாரவர்.
” பக்காத்தான் தலைவர்கள் கண்டுள்ள உடன்பாட்டைக் கேள்வி கேட்கும் வகையில் அசிசான், பக்காத்தானிலிருந்து விலகிச் செல்வதாக தெரிகிறது”, என்று விஜயரத்னம் கூறினார்.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரும், தண்ணீரைத் தனியார் மயப்படுத்துவதை எதிர்ப்பவருமான சார்ல்ஸ் சந்தியாகுவும் வெட்டுமர நடவடிக்கை மேற்கொள்வதைக் கண்டித்தார். அசிசான் தம் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
