போலீஸ் வட்டாரம்: அது நூர்டின் அல்ல 10 Aug | செய்தி.

பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும்  நுர்டின் முகமட் டாப் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான போதிலும் அவர் இன்னும் இந்தோனிசியாவில் உயிருடன் இருப்பதாக அந்நாட்டுப் போலீசார் நம்புகின்றனர்.

கடந்த வார இறுதியில் நூர்டின் மறைந்திருக்கும் இடம் என்று சந்தேகிக்கப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட ஒரு நபர் நுர்டின் அல்ல என்பது விரல் ரேகை சோதனைகள் மூலம் தெரிய வந்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறின.

“அது அவர் அல்ல. அவரது முக அமைப்பும் விரல் ரேகையும் எங்களுக்குத் தெரியும்”, என்று அடையாளம் கூறவிரும்பாத அந்த வட்டாரம் தெரிவித்தது.

அவரைத் தேடும் பணி தொடருவதாகவும் அது குறிப்பிட்டது.

நூர்டுன் மரணமடையவில்லை என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் போலீசார் இன்னும் மரபணு சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.

“கொல்லப்பட்டவர் யாராக இருந்தாலும் அது அறிவியல் ரீதியில் முடிவு செய்யப்பட வேண்டும்”, என்று போலீஸ் பேச்சாளர் நானான் சொகர்னா கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை மத்திய ஜாவாவில் பண்ணை வீடு ஒன்றின் மீது 17 மணி நேரத்திற்கு மேல் நீடித்த முற்றுகைக்கு பின்னர் குண்டுகள் துளைத்த சடலம் ஒன்று கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த சடலத்தின் புகைப் படங்கள் நூர்டினை பிரதிபலிக்கவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டன.

நெருக்குதல் அதிகரித்து வருகிறது

முற்றுகையிடப்பட்ட வீட்டில் நூர்டின் இருந்தாரா இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை என்றாலும் மலேசியரான நூர்டின் போலீசார் அங்கு செல்வதற்கு முன்னரே தப்பியிருக்கலாம் என்று பயங்கரவாத தடுப்புப் போலீசார் கூறினார்.

“நாங்கள் நூர்டினைப் போன்று விரைவாக இல்லை”, என்று அவர்கள் தெரிவித்தனர்.

நூர்டின் ஏற்கனவே இரண்டு முறை போலீஸ் முற்றுகையிலிருந்து தப்பியிருக்கிறார்.

இந்தோனிசியாவுக்கு அவர் மேலும் சேதத்தை விளைவிக்கும் முன்னர் அவரைப் பிடிக்குமாறு பயங்கரவாத தடுப்புப் போலீசார் மீது நெருக்குதல் அதிகரித்து வருகிறது.

அந்தச் சடலம் நூர்டினுடையது அல்ல என்பது இந்தோனிசியப் போலீசாருக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தாலும் குண்டுகளைத் தயாரிக்கும் கூடம் ஒன்றை  கண்டு பிடித்திருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும்.

கடந்த ஜுலை மாதம் 17 ம் தேதி ஜகார்த்தாவில் உள்ள இரண்டு ஆடம்பர ஹோட்டல்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் நூர்டினைத் தேடுவதை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

ஏ எப் பி

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply