அரச நிந்தனை வழக்குகள்:வழக்கறிஞர் மன்றம் சாடல் 9 May | செய்தி.

images9.jpgவிவாதங்களையும் கருத்துப் பரிமாற்றங்களையும் தடை செய்யும் வழிமுறையாக அரச நிந்தனைச் சட்டம் பயன்படுத்தப்படும் போக்கு குறித்து வழக்கறிஞர் மன்றம் அச்சம் தெரிவித்துள்ளது.

அரசமைப்பு வழங்கும் பேச்சுரிமையைப் பயன்படுத்தும் ஒருவருக்கு எதிராக அச்சட்டம் பயன்படுத்தக்கூடாது என அது அழுத்தம் திருத்தமாக கூறியது.

ஜசெக தலைவர் கர்ப்பால் சிங்குக்கு எதிராக போலிஸ் புகார் செய்யும்படி பிரதமர் அப்துல்லா பணித்திருப்பது குறித்து அம்மன்றத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கவலை தெரிவித்தார்.

அண்மையில் ராஜா பெட்ரா கமருடின் மற்றும் சைட் அக்பர் அலிக்கு எதிராக அரச நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை அடுத்து கர்ப்பாலுக்கு எதிராக அதே அரச நிந்தனை சட்டம் பயன்படுத்தப்படுவதைக் குறிப்பிட்டு “விவாதங்களையும் கருத்துப் பரிமாற்றங்களையும் தடுகக காலத்துக்கு ஒத்துவராத அடக்குமுறை சட்டத்தைப் பயன்படுத்தும் கவலைதரும் போக்கு உருவாகி வருவதாக”, ஓர் அறிககையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

செவ்வாய்க்கிழமை மலேசியா டூடே வலைப்பதிவில் வெளியான கட்டுரைகளுக்காக ராஜா பெட்ராவும் சைட் அக்பரும் அரச நிந்தனைச் சட்டத்தின்கீழ் தனித்தனியே குற்றம் சாட்டப்பட்டனர்.

இப்போது அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் மன்றமும் அரசு சார்பற்ற மலாய் அமைப்பான மலாய் ஒருமைப்பாட்டு செயல் முன்னணியும் செய்துள்ள போலிஸ் புகார்களின் அடிப்படையில் சட்டத்துறை தலைவர் செயல்பட முடிவு செய்தால் கர்ப்பாலுக்கு எதிராகவும் அதே குற்றச்சாட்டு கொண்டு வரப்படலாம்.

பணிமாற்ற்ம் செய்யப்பட்ட ஜம்ரி சூரியை திரும்பவும் அதே பணிக்கு நியமனம் செய்த பேரா சுல்தான் அஸ்லான் ஷாவின் உரிமை குறித்து கர்ப்பால் கேள்வி எழுப்பியது அரச நிந்தனைக்குரியது என்பது அவர்களின் வாதம்.

அதே நேரம் கர்ப்பாலுக்கு எதிராக ஒரு போலிஸ் புகார் செய்யும்படி அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் மன்சூரையும் பிரதமர் பணிக்க நேற்று பிற்பகலில் செந்தூல் போலிஸ் நிலையத்திலும் ஒரு புகார் செய்யப்பட்டது.

சுல்தானின் பொறுப்புகள் குறித்து குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் அறியாதிருக்கிறார் என்றும் அவரது அறிககையால் மலாய்க்காரர்-அல்லாதார் உள்பட பலரும் ஆத்திரமடைந்திருப்பதாக பிரதமர் கூறினார்.

மார்ச் 8 தேர்தலுக்குப் பின்னர் பொது மற்றும் அரசமைப்புச் சட்டங்கள் தொடர்பான பல விவகாரங்கள் தலையெடுத்திருப்பதை அம்பிகா சுட்டிக்காட்டினார்.

திரெங்கானு மற்றும் பெர்லிஸ் மந்திரி புசார்கள் நியமன விவகாரமும் அதில் அடங்கும்.

“மந்திரி புசார்கள் நியமனத்தில் அரண்மனையின் செயல்பாடு அரசமைப்புக்கு முரணானது என அரசாங்கத்தில் உள்ள பலரும் பொதுமக்களும் கருத்துத் தெரிவித்தனர்”, என்றாரவர்.

பிர்தமர், பெர்லிசில் ஷகிடான் காசிமும் திரெங்கானுவில் இட்ரிஸ் ஜூசோவும் தொடர்ந்து மந்திரி புசார்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை.

பெர்லிஸ் ராஜா மற்றும் திரெங்கானு சுல்தான் விருப்பப்படி டாக்டர் முகம்மட் இசா சாபுவும் அகமட் சயிட்டும் மந்திரி புசார்களாக நியமனம் செய்யப்பட்டார்கள்.

கர்ப்பாலும் இதே தோரணையில்தான் கருத்துத் தெரிவித்துள்ளார் என வழக்குரைஞர் மன்றத் தலைவர் கூறினார்.

“ஜம்ரியின் பணிமாற்றம் தொடர்பான சட்ட விவகாரம் குறித்து கர்ப்பால் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“அவருக்கு எதிராக அரச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்துவது ஆரோக்கியமான வாதங்களுக்கு அணைபோடும் நடவடிக்கையாகும் ” என்று அம்பிகா கூறினார்.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply