கைரியின் ரெம்பாவ் வெற்றிக்கு எதிராக முறையீடு 9 May | செய்தி.

kairi.gifமார்ச் 8 தேர்தலில் நெகிரி செம்பிலான் ரெம்பாவ் தொகுதி தேர்தல் முடிவுக்கு எதிராக முறையீடு செய்துகொள்ளப்பட்டிருக்கிறது.

அத்தொகுதியில் அம்னோ இளைஞர் பிரிவு துணைத் தலைவர் கைரி ஜமாலுதீன் வெற்றி பெற்றார்.

அங்கு பல முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக அந்த முறையீடு குறிப்பிடுகிறது.  முக்கியமாக வாக்குச்சீட்டு எண்ணிக்கையில் முரண்பாடுகள் காணப்படுவதாக அது கூறுகிறது.

கைரியை எதிர்த்துப் போட்டியிட்ட கெஅடிலான் உச்சமன்ற உறுப்பினர் பட்ருல் ஹிஷாம் ஷகாரின் அந்த முறையீட்டைச் செய்திருக்கிறார்.

இப்படிப்பட்ட முறைகேடுகள் இருப்பதால் அத்தேர்தல் முடிவைச் செல்லாது என அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டிருப்பதாக பட்ருலின் வழக்குரைஞர் கெஅடிலான் பொருளாளர் வில்லியம் லியோங் கூறினார்.

வாக்குச் சீட்டுகள் எண்ணிக்கை பற்றிக் குறிப்பிட்ட அவர்,” 745 வாக்குச்சீட்டுகள் கூடுதலாக இருப்பதற்கு கணக்கு தெரியவில்லை”, என்றார்.

நாடாளுமன்றத் தொகுதிக்கு 48,901 வாக்குச்சீட்டுகள் வெளியிடப்பட்டன. ஆனால் அந்நாடாளுமன்ற தொகுதிக்குள் அடங்கும் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு (பாரோய், செம்போங், ரந்தாவ் மற்றும் கோத்தா) 49,646 வாக்குச்சீட்டுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

பட்ருல் தமது முறையீட்டில் பாரம் 14 தமக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

பாரம் 14 என்பது ஒவ்வொரு வாக்களிப்பு மையத்திலுமுள்ள வாக்காளர் எண்ணிக்கையை விவரிக்கும் பத்திரமாகும்.

இவை தொடர்பாக போலிசிலும் தேர்தல் ஆணையத்திடமும் செய்யப்பட்ட புகார்கள் கவனிக்கப்படவில்லை என்றவர் கூறிக்கொள்கிறார்.

ஊராட்சி மன்றத்தையும் அவர் குறைகூறினார். ரெம்பாவ் முனிசிபல் திடலைத் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்திக் கொள்ள  தமக்கு  அனுமதி மறுக்கப்பட்ட வேளையில் கைரி அங்கு தேர்தல் பரப்புரை செய்ய அனுமதிக்கப்பட்டதாக பட்ருல் கூறியுள்ளார்.
 
இப்படி பல முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக லியோங் கூறினார்.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply