நாட்டின் 22 நெடுஞ்சாலைகளிலும் சாலைக் கட்டண உயர்வு குறித்த மக்களின் குறைகூறலுக்கு அரசாங்கம் செவிசாய்ப்பது போல் தெரிகிறது.
அரசாங்கம் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து முறைகளை மறுபரிசீலனை செய்து வருவதாக பொதுப்பணி அமைச்சர் முகம்மட் ஸின் முகம்மட் கூறினார்.
இந்த மறுபரிசீலனை, சாலைக் கட்டண உயர்வைத் தடுப்பதுடன் சில இடங்களில் நடப்பு சாலைக் கட்டணங்கள் குறைக்கப்படுவதற்கும் வழிகோலலாம். நாடாளுமன்றத்தில் டோனி புவா (ஜசெக- பெட்டாலிங் ஜெயா உத்தாரா) வின் கேள்விக்கு விடையளிக்கையில் ஸின் இவ்வாறு கூறினார்.
“சாலைக் கட்டணம் செலுத்திய பின்னர் போக்குவரத்து நெரிசலில் ஐந்து ஆறு மணி நேரம் சிக்கிக் கொள்ளாதிருக்க போக்குவரத்து முறையும் சீரமைக்கப்பட வேண்டும்.
“சாலைக் கட்டணம் செலுத்திவிட்டு போக்குவரத்து நெரிசலிலும் சிக்கிக் கொள்வது மக்களுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணுகிறது.
“ஆத்திரமடையும் மக்கள் எதிர்க்கட்சிகளை ஆதரிக்கிறார்கள். அவர்கள் எதிர்க்கட்சிகளை ஆதரிப்பதை நாங்கள் விரும்பவில்லை”, என்றாரவர்.
கின்ராரா சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட்ட தெரேசா கொக் (ஜசெக-சீபூத்தே) “tol sana, tol sini” (அங்கே சாலைக்கட்டணம்,இங்கே சாலைக்கட்டணம்) என்று கூறும் சுவரொட்டிகளை ஒட்டி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, சாலைக்கட்டண உடன்பாடுகளை தமது அமைச்சு திருத்தி அமைக்க பேச்சுகளை நடத்தி வருவதாக ஸின் கூறினார்.
“சாலைக் கட்டணங்களால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சுமையை அரசாங்கம் முழுமையாக உணர்ந்திருக்கிறது என அவர் குறிப்பிட்டார்.
பின்னர் மக்களவைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய ஸின், மறுபரிசீலனை நடவடிக்கை முடிவடைய மூன்று மாதங்கள் பிடிக்கும் என்றார்.

‘பொதுமக்கள் எதிர்நோக்கும் சுமை’ யை இப்போது தான் புரிந்து கொண்டீர்களோ!
டோல் கட்டணைத்தைக் குறைத்தால் அம்னோவின் தனியார் நிறுவனத்துக்குக் கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டிவருமே!
நீங்கள் எக்கேடு கெட்டாலும் யாரும் கண்டு கொள்ள போவதில்லை. நீங்கள் கட்டணத்தைக் குறைத்தே ஆகவேண்டும். அது தான் விதி.