நஜிப் என்னைச் சந்திப்பதைத் தடுத்தார் பிரதமர்: மகாதிர் 7 May | செய்தி.

maathir.jpgதுணைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம்மைச் சந்திப்பதைப் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி  தடுத்ததாக டாக்டர் மகாதிர் திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்றை இன்று வெளியிட்டார்.

“இப்போது அம்னோவில் ஜனநாயகம் இல்லை. நான் சொல்லப்போகும் விசயம் சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம்- நான் நஜிப்பைச் சந்திக்க விரும்பினேன். அவரும் வந்து பார்ப்பதாக சொன்னார்”, என்று புத்ராஜெயாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

“முதலில் பிரதமரின் அனுமதி பெற வேண்டும் என்றார். அது அவருக்குக் கிடைக்கவில்லை போல் தெரிகிறது. அதனால் இன்றுவரை என்னைப் பார்க்க வரவில்லை”, என்று மகாதிர் கூறினார்.

“பிரதமருக்கு துணைப்பிரதமரிடம் நம்பிக்கை இல்லாமல் போயிற்று என்பதை நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது. நான் பிரதமராக இருந்தபோது எனக்குத் துணையாக இருந்தவரை நம்பினேன்-அவர் பிடிக்காத சில வேலைகளைச் செய்யும்வரை”, என மகாதிர் கூறினார்.

“தேர்தல் முடிந்தவுடனேயே” நடப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்க நஜிப்பைச் சந்திக்க முயன்றதாக, முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

“அம்னோவில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை”, என்றாரவர்.

இதை வெளியில் தெரிவிக்காமல் இருக்க நினைத்ததாகவும் ஆனால் கட்சியில் மாறுபட்ட கருத்துகளை அடக்கும் முயற்சிகள் அதிகரித்திருப்பதாக தாம் நம்புவதால் இந்த விசயத்தை வெளியிட முடிவு செய்ததாகவும் மகாதிர் கூறினார். 

“நிலைமை மோசமடைந்து வருகிறது. பேசுவதற்குக்கூட அனுமதிக்கப்படுவதில்லை. தெங்கு ரசாலி கிளை நிலையில் உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு செல்லும்போது, அவரது கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என அம்னோ உறுப்பினர்கள் தடுக்கப்படுவதாக கேள்விப்படுகிறேன்.

“என்ன கட்சி இது? ஒருவர் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். கடந்த தேர்தலின் தோல்விகளுக்கு இதுதான் காரணம் என்று நினைக்கிறேன். மக்கள் பேச அனுமதிக்கப்படவில்லை. அதனால் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள தலைவர்களுக்கு வாய்ப்பில்லாது போய்விட்டது” ,என்றாரவர்.

அவசரப் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டாம் என்று அப்துல்லா அம்னோ தொகுதிகளுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் குறித்து கருத்துரைத்த மகாதிர், அது அவர் மீண்டும் அம்னோ தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு நடவடிக்கை என்றார்.

“அவசரப் பொதுக்கூட்டமின்றி, 30 விழுக்காட்டு நியமனம் தேவை என்றிருக்கும் விதியை மாற்ற இயலாது. அந்த மாற்றம் செய்யப்படாத நிலையில் எந்தத் தொகுதியும் அப்துல்லாவைத் தவிர வேறு எவரையும் நியமிக்காது….அவர் போட்டியின்றி வெற்றி பெறலாம்”, என்று மகாதிர் தெரிவித்தார்.

இப்போதைய நிலையில் கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஒருவர், 191 அம்னோ தொகுதிகளில் 30 விழுக்காடு அதாவது 58 தொகுதிகளின் நியமனத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

இந்த விதியை ஏற்படுத்தியதே மகாதிர்தான். கடந்த சில மாதங்களாக இந்த விதியைக் கடுமையாக குறை சொல்பவராக அவர் மாறிவிட்டார்.

அம்னோ தொகுதிகளிடம் அவசர பொதுக்கூட்டம் நடத்தும் வேகம் குறைந்து போயிருப்பதாக நினைக்கிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, ஆம் என்பதற்கு அடையாளமாக  தம் கையினால் ஒரு விமானம் தரை இறங்குவதுபோல்  செய்து காண்பித்தார்.

“எதற்கு என்று தெரியவில்லை. பயப்படுகிறார்கள். அவசரப் பொதுக்கூட்டம் நடத்தியவர்கள்கூட நியமன முறை திருத்தப்பட வேண்டும், தலைவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தவில்லை.”

கட்சித் தலைமைத்துவத்தைக் குறைகூறும் அம்னோ தொகுதிகளை அடக்கிவைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக  நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு அப்படிப்பட்ட முயற்சிகள் நடந்திருக்கலாம் என்று நம்புவதாக மகாதிர் குறிப்பிட்டார்.

மார்ச் 8 தேர்தல் முடிந்த நேரத்தில், மகாதிர் உள்பட அம்னோ மூத்த தலைவர்கள் பலரும் பாரிசான் நேசனலின் தோல்விக்கு அப்துல்லாவையே குறைகூறினர்.

இயன்ற விரைவில் நஜிப்புக்கு இடமளிக்கும் வகையில் அபதுல்லா பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

முன்னாள் கட்சி உதவித் தலைவர் தெங்கு ரசாலி, எதிர்வரும் கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு அப்துல்லாவை எதிர்த்து போட்டியிடப் போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.    

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply