வரலாற்றை கொலை செய்யாதீர்
- உண்மை தேடுபவர்
பாசாய் இளவரசியை மணந்து கொண்டு முஸ்லிமாக மதம் மாறி இஸ்கந்தர் ஷா என்ற பெர்சியப் பெயரை வைத்துக் கொள்வதற்குமுன் பரமேஸ்வரா ஓர் இந்திய இந்துவாக இருந்தார் என்பது ஓர் இரகசியம் அல்ல. எனது பள்ளி நாள்களில் நான் இப்போது கூறியுள்ளது போல் உண்மையைக் கூறுவது ஒரு பிரச்னையாக இருந்ததில்லை. இவ்விசயத்தில் பள்ளிப் புத்தகங்கள் தெளிவாக இருந்தன - ஆனால் இன்று அப்படி இல்லை, என்று தெரிந்து கொண்டுள்ளேன்.
மீண்டும் ஒரு முறை “பலவீனமான” அம்னோவின் தலைமையிலான பாரிசான் அரசாங்கம் புகழ் பெற்ற இந்த மலாக்கா இளவரசன் சக்தி வாய்ந்த இந்து பேரரசான ஸ்ரீ விஜயாவைச் சேர்ந்த ஓர் இந்து என்ற அனைத்து குறிப்புகளையும் துடைத்தொழிக்க வேண்டியதாயிற்று. திடீரென்று நமது அருங்காட்சியகங்கள் மற்றும் பள்ளிப் புத்தகங்கள் பரமேஸ்வராவை ஒரு மலாய் இளவரசனாக குறிப்பிடுகின்றன. அம்னோவின் பொய் முக்கியமான நாளிதழ்களுடன் நின்றுவிடவில்லை.
ஒருவர் மதம் மாறினாலும் அவரது இனத்தை மாற்ற முடியாது. இதனைப் புரிந்து கொள்ளாமல், பரமேஸ்வராதான் அம்னோவின் பெருமைக்குரிய “மலாய்க்காரரின் மேலாண்மை” பாரம்பரியத்திற்கு பொறுப்பாக இருந்திருக்கூடும் என்று கூறப்படுகிறது. இதுதான் அதன் (மலாய்க்காரரின் மேலாண்மை) அடிப்படை என்றால், “மலாய்க்காரரின் மேலாண்மை” என்று ஒன்று இல்லை. மலாக்கா சுல்தான் பரம்பரை இந்திய வம்சாவழி வந்தது, மலாய்க்காரர் வம்சாவழியல்ல.
அடோல்ப் ஹிட்லரின் கொள்கை பரப்பாளர் கோபெல்ஸ், “ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறினால், அது உண்மையாகிவிடும்”, என்று கூறினார். அதனைத்தான் “மலாய்க்காரரின் மேலாண்மை” கொள்கை
ஆதரவாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோகூர் காட்டில் புதையுண்டு கிடக்கும் ஒரு பழங்கால நகரம் பற்றியத் தகவல் 2005 ஆம் ஆண்டு நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாக வெளிவந்தன. பின்னர், வெளிவந்த அதே வேகத்தில் மறைந்து விட்டன.
இது ஒரு மிக முக்கியமான கண்டுபிடிப்பு. வரலாற்றில் மிகப் பெரும் பேரரசுகளில் ஒன்றான இராஜ சோழப் பேரரசு மாலத் தீவிலிருந்து இலங்கை, தென்கிழக்கு ஆசியாவரையில் ஆண்டுள்ளது என்பதைக் காட்டும் அகழ்வாராட்சி கண்டுபிடிப்பாகும்.
இது இந்திய/இந்து அரசனான இராஜ இராஜ சோழன் பற்றியது, இராஜா சூலான் எனப்படும் மலாய் அரசன் பற்றியது அல்ல.
உண்மையில், வரலாற்றை நேசிப்பவர்களுக்கு இது ஒரு பிரச்னையாக இருக்கக்கூடாது. எந்த இனம் ஆண்டது அல்லது ஆளவில்லை என்பது முக்கியமல்ல. எது முக்கியம் என்றால் ஒருவர் விரும்பும் உண்மைகளை உருவாக்குவதற்காக வரலாற்றை கொலை செய்யக்கூடாது என்பதுதான்.
ஹாங் துவா ஒரு சீனரா? இக்கேள்வி எழ வேண்டியதே இல்லை. சீனர்களும் இந்தியர்களும் கத்தியை அசைத்து அவர் எங்கள் இனத்தவர் என்று ஆர்ப்பரிக்கப் போவதில்லை. இம்மாதிரியான அற்பத்தனம் சிறுபுத்திகாரர்களிடம் இருந்துதான் வருகிறது. உண்மையை உண்மையாகக் கூறுவதுதான் முக்கியம்.
ஹாங் துவா பற்றிய பாடம் ஏன் நமது பள்ளி வரலாற்று பாடப் புத்தகங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளது? ஹாங் துவா வேறு இனத்தவராக இருந்த போதிலும், நமது வரலாற்றுக்கு அது அளிக்கும் முக்கியத்துவம் என்ன?
ஹங் துவா ஒரு சீனர் என்று கூறுவது தவறு என்றால், ஹங் துவா வரலாறு ஏன் நமது பாடப் புத்தகங்களிலிருந்து காணாமல் போய் விட்டது?







May 6th, 2008 at 9:37 pm
சிந்திக்க வேண்டிய விடயங்களை இக்கட்டுரை நமக்கு பகிர்ந்துள்ளது. மேலும் இதுத் தொடர்பாக பல ஆய்வுக் கட்டுரைகளை ‘மலேசியா இன்று’ தொடர்ந்து வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். இக்கட்டுரையை படைத்த எழுத்தாளருக்கு எமது பாராட்டுகள்.
May 11th, 2008 at 4:18 am
என் கருத்தை நடுநிலையோடு ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் இதனை எழுதுகிறேன்.
பரமேஸ்வரா ஓர் இந்துவாக இருந்திருக்கலாம். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் அவர் ஓர் இந்தியர் என்று சொல்வது தவறாகும். இந்து சமயம் அக்காலக்கட்டத்தில் இந்தோனீசியத் தீவுகளில் பரவியிருந்தது. இஸ்லாமிய வருகைக்கு முன்பு மலாய் நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தியிருந்தது. இதற்கு உதாரணமாக வாயாங் கூலிட் நாடகங்களில் தோன்றும் ராமாயணப் பாத்திரங்களைக் கூறலாம்
பரமேஸ்வரா இந்தோனீசியத் தீவிலிருந்து (எந்தத் தீவு என்பது எனக்கு ஞாபகம் இல்லை) இன்றைய சிங்கப்பூருக்குள் நுழைந்து, சயாமிய பாதுகாப்பில் இருந்த தாமாகி அரசரைக் கொன்று விட்டு, இன்று மலாக்கா என்று அழைக்கப்படும் ஊருக்குள் தப்பி ஓடிச் சென்றுள்ளார். அங்குத் தமது பரிவாரங்களுடன் ஆட்சியை நிறுவினார். சீனாவுடன் நல்லுரவை வளர்த்துக் கொண்ட அவர் சயாமின் படையெடுப்பைச் சமாளித்தார்.
அவரின் பூர்வீகத்தைக் கொண்டு அவர் இந்த இனத்தவராக இருக்கலாம் என்று ஓரளவு ஊகிக்கலாம். ஆனால் அவர் நிச்சயமாக ஒரு இந்தியராகவோ ஒரு மலாய்க்காரராகவோ இல்லை. இதனை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அவர் (ஒரு பெண்ணுக்காக) இஸ்லாமியராக மாறியது இன்றைய மலாய்காரர்களுக்குப் பெருமை தரலாம். ஆனால், அதற்காக அவர் மலாய்க்காரர் என்று சொல்வது மடைமை. (ஓர் இந்துவாக இருந்ததால் அவர் இந்தியர் என்று சொல்வதும் மடைமையே!)
ஆனால், பிற்காலத்தில் மலாக்கா இராஜ்ஜியத்தில் இரண்டு தமிழர்கள் புகழ் பெற்றுத் திகழ்ந்தனர் என்பது நமக்குப் பெருமை. அவர்கள் துன் பேராக் மற்றும் துன் அலி என்பவர்களே. இவர்கள் தமிழர்களாக இருந்தாலும் மதத்தால் இஸ்லாமியர்களாக இருந்ததால், நாம் அந்தப் பெருமையை அனுபவிக்க முடியவில்லை. துன் பேராக் பெண்டாஹாராவாக இருந்திருக்கிறார். இவரின் மதி நுட்பத்தால் மலாக்கா பிரசித்தி பெற்றது. துன் அலி சுல்தானாக இருந்திருக்கிறார். இவரின் ஆட்சியின் போது மலாய்க்காரர்களுக்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் இடையில் மிகுந்த விரிசல் ஏற்பட்டிருந்தது.
பாண்டிய மன்னன் இன்றைய கெடா மாநிலம் வரைக்கும் வந்து ஆதிக்கம் செலுத்தியது, நாம் பெருமைப்பட வேண்டிய இன்னொரு வரலாறு ஆகும். அதற்கு ஆதாரமாக இன்றைய லெம்பா பூஜாங் திகழ்கிறது. ஆனால், அதிலும் துயரம் இருக்கிறது. தமிழக வணிகர்களை கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்டு அவர்களை நிம்மதியாக வர்த்தகம் செய்ய விடுவதற்காகவே அவர் கடாரம் வரைக்கும் படையெடுத்திருக்கிறார். மலாயாப் பகுதியை ஆட்சி செய்யும் எண்ணம் அவருக்கு ஏற்படவில்லை. இதற்கு இரண்டு காரணம் இருக்கலாம். தொலைத்தொடர்பு சிறப்பாக இல்லாத காலக்கட்டத்தில் தமது நாட்டை மட்டும் காத்துக் கொண்டால் போதும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கக் கூடும். இரண்டாவது, மலாயாவின் வட பகுதி சயாமிய ஆட்சிக்குட் பட்டிருந்தது. பாண்டிய மன்னர் சயாமிய பகைமை வேண்டாம் என்று கருதி ஒரு வேளை தம்மாட்சியை இங்கு விரிக்காமலிருந்திருக்கலாம்.
இஸ்லாமியர்கள் வரலாற்றைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வதில் திறமையானவர்களே. இதற்கு இன்னொரு உதாரணமும் இருக்கிறது. இன்றைய பாக்கிஸ்தான் வரைக்கும் படையெடுத்த அலெக்சாண்டரை இஸ்காண்டார் என்று அழைப்பார்கள். இப்படி இஸ்லாமிய மேக்காப் செய்து பெருமையடித்துக் கொண்டதன் விளைவுதான் பரமேஸ்வரா சரித்திரம்.
May 12th, 2008 at 10:19 am
சென்ற இடுக்கையில் பரமேஸ்வரா எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது எனக்குத் தெரியாது என்று எழுதியிருந்தேன். அதனை ஒரு நண்பரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர் பலெம்பாங் நாட்டில் இருந்து வந்தவர். அப்படிப் பார்க்கையில் அவர் ஒரு ஜாவா காரராக இருக்க வேண்டும். அவர் இந்தியராக இருக்க வாய்ப்பு இல்லை. ஜாவா காரர்களுக்கு என்று தனி மொழி, கலை, கலாச்சாரம் இருக்கும். அது நூசாந்தாரா காலாச்சாரம் என்றும் அழைப்பர்.
August 11th, 2008 at 1:16 am
ஐயா ஜான்சன் அவர்களே !
பரமேஸ்வரா(ன்) மலக்காவுக்கு வரும் பொழுது , பலேம்பாங், கெடா,ஒரு பகுதி ஆஸ்ட்ரேலியா , மற்றும் பல ஆசிய நாடுகள், ராஜ ராஜ சோழனின் மகன் , ராஜேந்திர சோழனின் ஆட்சியில் இருந்தது , பரமேஸ்வரா ( கெராபட் டி ராஜா )ராஜ பரம்பரையை சேர்ந்தவர் என்பதால் அவர் கண்டிப்பாக ஒரு இந்திய,இந்து, தமிழராகத்தான் இருக்க வேண்டும்.