மலேசியா டுடே(Malaysia Today) வலைப்பதிவர் ராஜா பெட்ரா கமருடின்மீது இன்று பெட்டாலிங் ஜெயா செசன்ஸ் நீதிமன்றத்தில் அரச நிந்தனை குற்றம் சுமத்தப்பட்டது.
ஏப்ரல் 25ம் தேதி மலேசியா டுடே வலைத்தளத்தில் அரச நிந்தனைக்குரிய ஒரு கட்டுரையை வெளியிட்டதற்காக அரச நிந்தனைச் சட்டம் செக்சன் 4(1) (C)-யின் கீழ் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அக்கட்டுரை ஒர் இளம் மங்கோலிய பெண்ணின் கொலையில் துணைப் பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கும் அவரின் துணைவியாருக்கும் தொடர்பு இருப்பதாக மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக ராஜா பெட்ரா விசாரணை கோரினார். விசாரணை அக்டோபர் 6ம் தேதி தொடங்கி 10ம் தேதிவரை நடைபெறும். ராஜா பெட்ராவுக்கு ஐயாயிரம் ரிங்கிட் ஜாமீன் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஜாமீன் கட்ட மறுத்த அவர் விசாரணை நாள்வரை காவலில் இருக்க முடிவு செய்துள்ளார்.
அவர் சுங்கை பூலோ சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ராஜா பெட்ராவின் துணைவியார் மரினா லீ அப்துல்லாவும் இன்று காலை நீதிமன்றம் வந்திருந்தார். தம் கணாவ்ர் ஜாமீன் கட்ட மறுத்தது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“தாம் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று அவர் கருதுகிறார். அதைத்தான் இப்படி உணர்த்துகிறார். அத்துடன் எங்களிடம் பணமும் இல்லை”, என்றாரவர்.
“ஒரு இயக்கத்தைத் தொடங்கி, ஆளுக்கு ஒரு ரிங்கிட் எனத் திரட்டி போதுமான நிதி சேர்ந்ததும் அவரை வெளியில் அழைத்து வருவோம்”, என அவர் கூறினார். ராஜா பெட்ராவின் ஜாமீன் தொகையைத் திரட்டுவதற்காக மலேசியா டுடே வலைத்தளத்தில் தொடங்கப்பட்டுள்ள நிதி-சேகரிப்பு இயக்கத்தைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறினார்.
