பரவெளித் திட்டத்தின் செலவு ரிம 39.11 மில்லியன் 6 May | செய்தி.

space.jpgமலேசியாவின் முதலாவது பரவெளியாளரை விண்வெளிக்கு அனுப்புவதற்கு ரிம 39.11 மில்லியன் செலவானது, பலரும் கூறுவதுபோல் பலநூறு மில்லியன் அல்ல. அறிவியல், புத்தாக்க மற்றும் தொழில்நுட்ப அமைச்சு இன்று இதனைத் தெரிவித்தது.

இதில் அமைச்சு செலவிட்ட தொகை ரிம 16.8 மில்லியன் என அமைச்சர் டாக்டர் மெக்சிமஸ் ஒங்கிலி கூறினார். எஞ்சிய செலவுத் தொகையை மலேசிய அணுவியல் கழகமும் நிதி அமைச்சும் மற்ற அரசாங்க அமைப்புகளும் ஏற்றன.

மேலும் ரிம 75.8 மில்லியன் தொகையை ரஷ்ய அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக அவர் சொன்னார்.

இன்று நாடாளுமன்றத்தில் இப்ராகிம் அலி (சுயேச்சை- பாசிர் மாஸ்)யின் துணைக் கேள்வி ஒன்றுக்கு விடை அளித்த அமைச்சர், அந்தப் பரவெளிப் பயணத்துக்கான செலவுத் தொகை பற்றி தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக கூறினார்.

“அதற்கு பலநூறு மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டதாக நினைப்பது தவறு. இப்போது நான் சொல்வதுதான் சரியான தகவல்”, என்று ஒங்கிலி குறிப்பிட்டார்.

18 சுக்கோய் 30-MKM ரக போர் விமானங்களை வாங்குவதன் தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட ஒரு துணை உடன்பாட்டின்படி ரஷ்யா, பரவெளிப் பயணத்துக்காகும் செலவில் ரிம 75.8 மில்லியனை ஏற்பதற்கு முன்வந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

அந்தப் பரவெளிப் பயணத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மருத்துவ நிபுணரான, 35 வயது, டாக்டர் ஷெய்க் முஸ்சபர் சுக்கூர் மாஸ்கோ நட்சத்திர நகரில் ஓராண்டுக்கு மேலாக பயிற்சி பெற்றார்.

முன்னதாக, நசிர் இப்ராகிம் பிகிர் (பாரிசான்- கோலா நுருஸ்) கேட்ட கேள்வி  ஒன்றுக்கு பதிலளித்த ஒங்கிலி, பரவெளிப் பயணம் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஏராளமான நன்மைகளைக் கொண்டு வந்திருப்பதாக கூறினார்.

இளைஞரிடையேயும் பொதுமக்களிடையேயும் அறிவியல் மற்றும் தொழிலில்நுட்பம் குறித்து கூடுதல் விழிப்புணர்வும் ஆர்வமும் தோன்றியிருப்பதும் அதில் அடங்கும்.

தங்களில் ஒருவர் பரவெளிக்குச் சென்று வந்ததை எண்ணி மலேசியர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.

அந்தப் பயணத்தால் ‘நுண்-புவியீர்ப்பு’ துறை ஆராய்ச்சி முன்னேற்றம் கண்டுள்ளது. அதன் விளைவாக கிட்டிய தொழில்நுட்ப அறிவு விரைவில் வணிகத்துறைக்கும் பயனளிக்கப் போகிறது என்று ஒங்கிலி மேலும் கூறினார்.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply