மார்ச் 8 தேர்தலுக்கு நான்கு நாள் இருந்த வேளையில் அடையாள மையைப் பயன்படுத்தும் திட்டத்தைக் கைவிட தேர்தல் ஆணையம் செய்த முடிவு, வதந்தியின் அடிப்படையில் செய்யப்பட்டதாகும் என இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஃபொங் போ குவானின் (ஜசெக-பத்து காஜா) கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் உள்துறை அமைச்சர் சைட் அமிட் அல்பார் இந்த அதிர்ச்சிதரும் தகவலை வெளியிட்டிருக்கிறார்.
தேர்தலில் அடையாள மையைப் பயன்படுத்தும் திட்டத்தை மார்ச் 4ம் தேதி, தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
தேர்தலில் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்துடன் சில தரப்புகள்,வெளிநாட்டிலிருந்து அடையாள மையை வாங்கியிருப்பதாக போலிஸ் புகார் செய்யப்பட்டிருப்பதால் அடையாள மை பயன்படுத்தும் திட்டத்தை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் கூறியது.
ஆனால் போலிஸ் நடத்திய விசாரணைகளில் அந்தப் புகார்களுக்கு ஆதாரம் இல்லை என்பது தெரிய வந்தது.
“போலிஸ் புகார்கள் தீர ஆராயப்பட்டு புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகள் விசாரிக்கப்பட்டதில் தாய்லாந்திலிருந்து மை நாட்டுக்குள் கடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் காணப்படவில்லை. சாட்சியம் அளித்த எவரும் அந்த மையைக் (கண்ணால்) கண்டதில்லை.
“சாட்சிகளை விசாரித்ததில் மை கடத்தலுடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு தனிப்பட்டவரோ, நிறுவனமோ, கட்சியோ அடையாளம் காணப்படவில்லை”, என சைட் அமிட் கூறினார்.
தாய்லாந்தில் அடையாள மையை எளிதாக வாங்கலாம் என்பதால் மார்ச் 8 தேர்தலில் அது தவறாக பயன்படுத்தப்படலாம் என்று கவலை கொண்டு புகார்தாரர்கள் போலிஸில் அது பற்றி முறையிட்டிருக்கிறார்கள் என்றும் சைட் அமிட் குறிப்பிட்டார்.
அடையாள மை பயன்படுத்துவதை ரத்து செய்ததை, ஆளும் கட்சி உள்பட பல தரப்புகள் குறைகூறின.
